ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ஆலோசனை கூட்டம்
வந்தவாசியில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடந்தது.
வந்தவாசி
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் வந்தவாசி மற்றும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் காவடிகள் எடுத்துக்கொண்டு வந்தவாசி நகரில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று திருத்தணி உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான ஆடிக்கிருத்திகை காவடி ஊர்வலம் நடைபெறுவதையொட்டி வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது.
தாசில்தார் பொன்னுசாமி தலைமை தாங்கினார். வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் முன்னிலை வகித்தார்.
இதில் பல்வேறு துறை அதிகாரிகள், பல்வேறு கட்சி மற்றும் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் 8-ந் தேதி மற்றும் 9-ந் தேதி ஊர்வலத்துக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது, பிரதான சாலைகளை செப்பனிடுவது, தேவையான மருத்துவ வசதியை ஏற்படுத்துவது, தடையின்றி மின்சாரம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.