நுகர்வோர் விழிப்புணர்வு முகாம்
நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள மங்கலம் கிராமத்தில் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வேப்பந்தட்டை வட்ட வழங்கல் அலுவலர் பழனியப்பன் தலைமை தாங்கி பேசுகையில், நுகர்வோர்கள் அனைவரும் விழிப்புடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும். அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தர முத்திரையை பார்த்து பொருட்கள் வாங்க வேண்டும், என்றார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் அம்சவள்ளி நடராஜன் வரவேற்றார். தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.கே.கதிரவன் கலந்து கொண்டு, நுகர்வோரின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றியும், கலப்படமற்ற பொருட்களை தேர்வு செய்யும் வழிமுறைகள் பற்றியும் விளக்கி பேசினார். வக்கீல் சங்கர், நுகர்வோர்கள் பாதிப்படையும்போது நுகர்வோர் நீதிமன்றத்தை அணுக வேண்டிய அவசியம் குறித்தும், நுகர்வோர் நீதிமன்றத்தில் இருந்து நிவாரணங்கள் பெறும் வழிமுறைகள் குறித்தும் விளக்கிப் பேசினார். இந்த முகாமில் மகளிர் சுய உதவிக்குழுவினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாமை களப்பணியாளர் பிரியா தொகுத்து வழங்கினார்.