சுயவிளம்பரத்திற்கு ரூ.19 லட்சம் இழப்பீடு கேட்டு வழக்கு:தாசில்தாருக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்


சுயவிளம்பரத்திற்கு ரூ.19 லட்சம் இழப்பீடு கேட்டு வழக்கு:தாசில்தாருக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்
x

சுயவிளம்பரத்திற்கு ரூ.19 லட்சம் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்த கோவையை சேர்ந்த முதியவர், தாசில்தாருக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

நாமக்கல்

பிறப்பு சான்றிதழ்

கோவை ஆர்.எஸ்.புரத்தில் வசித்து வருபவர் ஜெயராமன் (வயது77). இவரது மகன் அமர்நாத். கடந்த 1976-ம் ஆண்டு பிறந்த அமர்நாத்தின் பிறப்பு சான்றிதழை கேட்டு கோவை மாநகராட்சியில் ஜெயராமன் விண்ணப்பித்து உள்ளார். அவரது மகனின் பிறப்பு பதியப்படவில்லை என மாநகராட்சி பதில் அளித்து உள்ளது.

அமெரிக்காவில் வாழும் அமர்நாத்திற்கு கிரீன் கார்டு பெற பிறப்பு சான்றிதழ் தேவைப்படுவதால் பிறப்பு பதியாமல் விடுபட்டு போனதை மன்னித்து, சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த தமது மகனின் பிறப்பை பதிவு செய்து பிறப்பு சான்றிதழ் வழங்குமாறு கோவை உதவி கலெக்டரிடம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ரூ.500 செலுத்தி ஜெயராமன் மனு கொடுத்து உள்ளார். இதனை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய கோவை வடக்கு தாசில்தாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அவரது மகனுக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் பிறப்புச் சான்றுக்காக பணம் செலுத்தி பல மாதங்கள் கடந்தும் கோவை வடக்கு தாசில்தாரும், தாசில்தார் அலுவலக ஊழியர்களும் சான்றிதழை வழங்காமல் காலதாமதம் செய்து வருவதால் தமக்கு ரூ.19 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ஜெயராமன் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்

இந்த வழக்கு விரைவான விசாரணைக்கு கடந்த ஜூலை மாதம் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் நேற்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிபதி டாக்டர் வீ.ராமராஜ் உறுப்பினர் ரத்தினசாமி முன்னிலையில் தீர்ப்பு வழங்கினார்.

அதில் தாசில்தார் பிறப்புச் சான்றிதழை வழங்கிய பின்பு, அதனை மறைத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் தவறான வழக்கை சுய விளம்பரத்திற்கும், தீய வழியில் இழப்பீடு பெறவும் ஜெயராமன் தாக்கல் செய்து அரசு ஊழியர்களின் பணிக்கு மிகுந்த இடையூறை ஏற்படுத்தி உள்ளதால் அவர் 4 வார காலத்திற்குள் தாசில்தாருக்கு ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Next Story