நுகர்வோர் உரிமைகள் தினவிழா பேச்சுபோட்டி:வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு


நுகர்வோர் உரிமைகள் தினவிழா பேச்சுபோட்டி:வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு
x
தினத்தந்தி 15 March 2023 6:45 PM GMT (Updated: 15 March 2023 6:46 PM GMT)

தூத்துக்குடியில் நடைபெற்ற உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா பேச்சுபோட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் ஆகியவை இணைந்து உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவை தூத்துக்குடியில் நடத்தின. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் தலைமை தாங்கி, மாசற்ற ஆற்றல்களுக்கு மாறுவதன் வழியாக நுகர்வோருக்கு அதிகாரமளித்தல் என்ற சுவரொட்டியை வெளியிட்டு பேசினார். மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் அலுவலர் அபுல்காசிம் முன்னிலை வகித்தார். மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன், எம்பவர் இந்தியா கவுரவ செயலாளரும், கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினருமான ஆ.சங்கர், தொழில்அதிபர் ராஜீவி ஆகியோர் பேசினர். உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தையொட்டி நடத்தப்பட்ட பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி மாணவி வசந்த குமாரிக்கு முதல் பரிசு ரூ.2 ஆயிரத்து 500, அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி மாணவி அனுசெல்வராதாவுக்கு 2-வது பரிசு ரூ.1500, ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் செல்வம் 3-வது பரிசு ரூ.1000-க்கான காசோலை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். குடிமைப் பொருள் வழங்கல் தனி தாசில்தார் ஜஸ்டின் செல்லத்துரை நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை சுதா குமாரி, எம்பவர் மேலாளர் லலிதாம்பிகை ஆகியோர் செய்து இருந்தனர்.


Next Story