கன்டெய்னர் லாரி- சரக்கு வேன்கள் மோதல்1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
போக்குவரத்து பாதிப்பு
ஆசனூர் அருகே கன்டெய்னர் லாரி, சரக்கு வேன்கள் மோதிக்கொண்ட விபத்தில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கன்டெய்னர் லாரி
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கோவைக்கு கன்டெய்னர் லாரி ஒன்று புறப்பட்டது. நேற்று காலை 7 மணி அளவில் ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே செம்மண் திட்டு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே ஈரோட்டில் இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகருக்கு சென்று கொண்டிருந்த சரக்கு வேனும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கன்டெய்னர் லாரியின் டீசல் டேங்க் உடைந்து டீசல் கீழே கொட்டியது. மேலும் பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு சரக்கு வேனும், ஏற்கனவே விபத்தில் சிக்கிய சரக்கு வேனின் மீது மோதியது. இந்த விபத்தில் 2 சரக்கு வேன்களும் சேதம் அடைந்தன.
போக்குவரத்து பாதிப்பு
இதன்காரணமாக அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் ஆசனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிய வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி சாலையோரத்தில் நிறுத்தி போக்குவரத்தை சீர் செய்ய தொடங்கினர். இதைத்தொடர்ந்து 8 மணி அளவில் போக்குவரத்து தொடங்கியது. 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். இதுகுறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கைகலப்பு
இதேபோல் நேற்று முன்தினம் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகருக்கு 30-க்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றுக் கொண்டு தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. தமிழக- கர்நாடக எல்லையான காரப்பள்ளம் அருகே சென்று கொண்டிருந்தபோது பஸ்சின் பின்னால் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த காருக்கு பஸ்சின் டிரைவர் வழிவிடவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே பஸ் சிறிது தூரம் சென்றதும், அதை கார் முந்தி சென்றது. பின்னா் காரை ஓட்டி வந்தவர் அதை பஸ்சின் முன் நிறுத்தினார். இதையடுத்து அதில் இருந்து இறங்கி பஸ் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் இது கைகலப்பாக மாறியதாக தெரிகிறது. உடனே அங்கிருந்தவர்கள் ஓடிச்சென்று டிரைவர்கள் 2 பேரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதையடுத்து பஸ்சும், காரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் காரப்பள்ளம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.