கல்லூரி பஸ் மீது கன்டெய்னர் லாரி மோதல்; 19 மாணவர்கள் காயம்


கல்லூரி பஸ் மீது கன்டெய்னர் லாரி மோதல்; 19 மாணவர்கள் காயம்
x

ஆரணி அருகே கல்லூரி பஸ் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் 19 மாணவர்கள் காயம் அடைந்தனர்.

திருவண்ணாமலை

ஆரணி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். சொக்கலிங்கம் கலைக்கல்லூரியில் இருந்து எஸ்.வி.நகரம், மாமண்டூர் வழியாக வாழைப்பந்தல் வரை கல்லூரி மாணவர்களை ஏற்றிச்செல்லும் கல்லூரி பஸ் மாணவர்களுடன், பாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரி முன்பு நின்று கொண்டிருந்தது. அப்போது ஆற்காட்டில் இருந்து ஆரணி நோக்கி வந்த கன்டெய்னர் லாரி திடீரென கல்லூரி பஸ் மீது மோதியது.

இதில் கல்லூரி பஸ்சின் பின்பகுதி சேதமடைந்தது. பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்துள்ளனர். அவர்களில் கீர்த்தனா, ரம்யா, தர்ஷினி, சுபாஸ்ரீ, தமிழ்ச்செல்வி, ஆஷா, கவுசல்யா, சபரிகிரி, சசிகலா, ரேவதி, சிவதர்ஷினி, ஏசு, வீரக்குமார், நரேஷ் குமார், பிரீத்தி, காவியா, வெண்ணிலா, பவித்ரா, சரஸ்வதி மற்றும் பஸ் டிரைவர் மணி ஆகிய 20 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆரணி தாசில்தார் பெருமாள், முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., கல்லூரி செயலாளர் ஏ.சி.ரவி, மண்டல துணை தாசில்தார் மோகனா, வருவாய் ஆய்வாளர் வேலுமணி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் காயமடைந்த மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறி வேறு பஸ்சில் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story