அவமதிப்பு வழக்கு மீது விசாரணை: சவுக்கு சங்கர் பதில் அளிக்க அவகாசம் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


அவமதிப்பு வழக்கு மீது விசாரணை: சவுக்கு சங்கர் பதில் அளிக்க அவகாசம் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

அவமதிப்பு வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கர் பதில் அளிக்க அவகாசம் வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

சமூக வலைதளத்தில் ஐகோர்ட்டு தீர்ப்பு குறித்தும், நீதிபதி குறித்தும் அவதூறாக பதிவிட்டது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது அவமதிப்பு வழக்கை மதுரை ஐகோர்ட்டு பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படியும் சவுக்கு சங்கருக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் இந்த அவமதிப்பு வழக்குபதிவு செய்த பின்னரும், யூடியூப் சேனலில் இந்த விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார் என்று அவர் மீது மதுரை ஐகோர்ட்டு பதிவாளர் கிரிமினல் அவமதிப்பு வழக்கை பதிவு செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் முன்பு சவுக்கு சங்கர் நேரில் ஆஜரானார்.

பின்னர் அவர், இந்த வழக்கில் உரிய பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரினார். மேலும் அவமதிப்பு நடவடிக்கை எடுத்ததற்கான காரணமாக கூறும் வீடியோ பதிவுகளை எனக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், அதற்கான வீடியோ பதிவுகள் மற்றும் பதிவுகள் உங்களிடம் இருக்கும். மேலும் நீதித்துறையில் ஊழல் படிந்திருப்பதாக தெரிவித்தது உண்மையா? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு சவுக்குசங்கர் கூறும் போது, நான் கூறிய கருத்தில் உறுதியாக இருக்கிறேன். எனது வழக்கில் என் சார்பில் வக்கீல் யாராவது ஆஜரானால் அவர்களின் தொழில் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே இந்த வழக்கில் நானே வாதாட விரும்புகிறேன் என தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், சட்ட உதவிகள் ஆணையம் மூலம் வேறு வக்கீல் நியமிக்க விரும்புகிறீர்களா என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், மூத்த வக்கீல் என். ஆர். இளங்கோவை நியமிக்க விரும்புகிறேன் என தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story