கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை - மதுரை கலெக்டர் அனீஸ் சேகர் நேரில் ஆஜராக உத்தரவு


கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை - மதுரை கலெக்டர் அனீஸ் சேகர் நேரில் ஆஜராக உத்தரவு
x

கலெக்டர் கோர்ட்டில் ஆஜராவதை அரசு வழக்கறிஞர் உறுதிப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மதுரை,

மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அவரது மனுவில், மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அரசு புறம்போக்கு நிலங்களை சில தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததாகவும், அந்த வழக்கில் ஆக்கிரமிப்பு செய்தவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவின்படி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத நிலையில், தற்போது சிலர் அதிகாரிகளின் துணையோடு, குறிப்பிட்ட பகுதியை தரிசு நிலமாக காட்டி பஞ்சாயத்து நிலமாக மாற்றம் செய்து உயர்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்றும், இது முற்றிலும் கோர்ட்டு உத்தரவுக்கு எதிரானது என்பதால் மதுரை கலெக்டர் அனீஸ் சேகர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுதாரர் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றாத மதுரை கலெக்டர் அனீஸ் சேகர், கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் எனவும், கலெக்டர் கோர்ட்டில் ஆஜராவதை அரசு வழக்கறிஞர் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.



Next Story