தொடர் விடுமுறை: கன்னியாகுமரியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்...!


தொடர் விடுமுறை: கன்னியாகுமரியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்...!
x

தொடர் விடுமுறை காரணமாக கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியுள்ளது.

கன்னியாகுமரி,

இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

இந்த நிலையில், தொடர் விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

மேலும் பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகா னந்தர்மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

மேலும் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் கன்னியாகுமரியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story