தொடர் மழை எதிரொலி: சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு


தொடர் மழை எதிரொலி: சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு
x

தொடர் மழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

தேனி

தேனி மாவட்டத்தில் உள்ள சிறந்த சுற்றுலா இ்டமாகவும், புண்ணிய தலமாகவும் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி விளங்குகிறது. இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் இந்த அருவி அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள தூவானம் ஏரியில் இருந்து அருவிக்கு நீர்வரத்து ஏற்படும். தூவானம் ஏரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீரும், மலைப்பகுதியில் பெய்கிற மழை நீரும் சேர்ந்து சுமார் 9 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதி வழியாக பயணித்து, பல்வேறு மூலிகை செடிகளில் கலந்து சுருளி அருவியாக கொட்டுகிறது.

இந்த அருவியில் குளித்தால் நோய்கள் குணமாகும் என்பது ஐதீகம். இதனால் தேனி மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்வார்கள். மேலும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்தநிலையில் தற்போது ஹைவேவிஸ் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஏரிகள் நிரம்பி வருகின்றன. இதன் எதிரொலியாக, அருவிக்கும் நீர்வரத்து அதிகரித்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


Next Story