தொடர் விடுமுறை:ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு-கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் திணறல்


தொடர் விடுமுறை:ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு-கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் திணறல்
x
தினத்தந்தி 6 Oct 2022 12:30 AM IST (Updated: 6 Oct 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon
நீலகிரி

ஊட்டி

தொடர் விடுமுறையையொட்டி ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் திணறினார்கள்.

படகு இல்லத்தில் குவிந்தனர்

ஊட்டியில் இரண்டாவது சீசன் தொடங்கிய நிலையில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் நீலகிரி மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவு சுற்றுலா பயணிகள் வருகை இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது பள்ளிகளுக்கு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறையும் விடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.

தற்போது ஊட்டியில் நன்றாக வெயில் அடித்து இதமான காலநிலை நிலவுவதால் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை முதல் 5 நாட்களாக சுற்றுலா தளங்கள் முழுவதும் களை கட்டியது. தாவரவியல் பூங்கா தொட்டபெட்டா ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இதேபோல் படகு இல்லத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்தனர்.

முன்னதாக தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை மற்றும் ஆயுத பூஜை விஜயதசமி காரணமாக ஊட்டி நகர் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சுற்றுலா பயணிகள் குற்றச்சாட்டு

இதனால் நீண்ட தூரத்தில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதைத்தொடர்ந்து போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். கொரோனாவுக்கு பின்னர் தற்போது வியாபாரம் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். அதே சமயத்தில் ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் உணவு மற்றும் தங்கும் விடுதி கட்டணம் அதிகமாக இருப்பதாக சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக நீலகிரி மாவட்டத்திற்கு சுமார் 1 லட்சம் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்து சென்றுள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் நேற்று மற்றும் அரசு தாவரவியல் பூங்காவிற்கு 15 ஆயிரம் பேர் வந்துள்ளனர்.


Next Story