ஆசிரியர்களுக்கான தொடர் பணி திறன் மேம்பாட்டு பயிற்சி
ஜெயங்கொண்டத்தில் ஆசிரியர்களுக்கான தொடர் பணி திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் சார்ந்த ஆசிரியர்களுக்கான தொடர் பணி திறன் மேம்பாட்டு பயிற்சி ஜெயங்கொண்டம் அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட திட்ட அலுவலர் பன்னீர்செல்வம் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினார். பயிற்சியினை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அம்பிகாபதி பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார். கீழப்பழுவூர் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் எழில் வளவன் மற்றும் விரிவுரையாளர் மாலா ஆகியோர் ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி, மேம்பாட்டு திறன் பற்றிய தகவல்களையும், பள்ளி மாணவர்களின் உடல் நலம், ஆரோக்கிய மேம்பாடு பற்றியும், தமிழக அரசின் கலைசார்ந்த சலுகைகள், பயன்கள் ஆகியவற்றை தெளிவாக எடுத்துக் கூறினர்.
இந்த பயிற்சியில் மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், அனைத்து வகை பட்டதாரி ஆசிரியர்கள் 289 பேர் கலந்து கொண்டனர். மேலும் பயிற்சியில் மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொணரும் வகையில் தமிழக அரசின் கலை திருவிழாவில் இடம்பெறும் பல்வேறு வகையான போட்டிகளில் பங்கேற்பது பற்றியும், அவர்களுடைய திறமைகளை வெளிக்கொணர்ந்து சாதனை புரியவும், அவர்களுக்கு தமிழக அரசின் பல்வேறு சலுகைகள் மற்றும் பயன்கள் பற்றியும் தெளிவாக கூறப்பட்டது. பயிற்சியில் கருத்தாளராக 18 பட்டதாரி ஆசிரியர்கள் செயல்பட்டனர்.