தொடர் விடுமுறை: குரங்கு நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள் குளித்து குதூகலம்- வால்பாறையில் போக்குவரத்து நெரிசல்


தொடர் விடுமுறை காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குவிந்்தனர். மேலும் ஆனந்தமாக குளித்து குதூகலம் அடைந்தனர். மேலும் வால்பாறையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கோயம்புத்தூர்

ஆனைமலை

தொடர் விடுமுறை காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குவிந்்தனர். மேலும் ஆனந்தமாக குளித்து குதூகலம் அடைந்தனர். மேலும் வால்பாறையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

குரங்கு நீர்வீழ்ச்சி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மேல் ஆழியாறு வனப்பகுதியில் குரங்கு நீர்வீழ்ச்சி (கவி அருவி) உள்ளது. சுற்றுலா தளமாக விளங்கி வரும் ஆழியாறுக்கு கோவை மாவட்டமின்றி திருப்பூர், ஈரோடு, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கவனித்தை ஈர்க்கும் வகையில் குரங்கு நீர்வீழ்ச்சி உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அங்கு சென்று, ஆனந்தமாக குடும்பத்்துடன் குளித்து குதூகளித்து செல்கிறார்கள்.

தற்போது பெய்த தென் மேற்கு பருவ மழை காரணமாக அருவியில் தண்ணீரில் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் குரங்கு நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும், அங்கு செல்வதற்கும் வனத்துறையினர் தடைவிதித்தனர். தற்போது மழை பொழிவு குறைந்ததால் அருவியில் மிதமான அளவில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

ஆனந்த குளியல்

இந்தநிலையில் சுதந்திர தினத்தையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உள்பட சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து உள்ளனர். குறிப்பாகநேற்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்்தது. இவர்கள் அனைவரும் கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் ஆழியாறு, குரங்கு நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தலஙகளில் குவிந்தனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் குரங்கு நீர்வீழ்ச்சியில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகையையொட்டி ஆனைமலை, பொள்ளாச்சி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வனத்துறையினரும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

வால்பாறை

வால்பாறை பகுதியில் கடந்த 2 மாதங்களாக பெய்த கனமழை காரணமாக பசுமையாக காட்சி தருவதோடு சுற்றியுள்ள அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் பாய்ந்து ஒடி வருகிறது. சோலையாறு அணையும் தனது முழு கொள்ளளவில் கடல் போல் காட்சியளித்து வருகிறது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் தமிழகம், கேரள, கர்நாடக உள்ளிட்ட பல்வேறு மாநிங்களில் இருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் காலை முதல் குவியத் தொடங்கினர். இதனால் வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து லாட்ஜ், தங்கும் விடுதி, காட்டேஜ் எல்லாம் நிறைந்து சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு இடம் கிடைக்காமல் திரும்பிச் சென்றனர்.கூழாங்கல் ஆற்றில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் ஆற்றில் இறங்கி குளித்து மகிழ்ந்தனர். வால்பாறை நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட நேரம் அணிவகுத்து நின்றது.

வால்பாறை பகுதியில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் காரணமாக வால்பாறை நகரில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது.சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு உணவு அருந்தவோ பொருட்களை வாங்கவோ செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளானார்கள்.


ஆழியார் சோதனை சாவடியில்

அனுமதிச்சீட்டு பெற்று செல்ல தாமதம்

வாகன ஓட்டிகள் திணறல்

தொடர் விடுமுறையையொட்டி ஆனைமலை அடுத்த ஆழியாறு குரங்கு நீர்வீழ்ச்சி மற்றும் வால்பாறை செல்வதற்காக வெளிமாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலத்திலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அப்போது சோதனை சாவடியில் அனுமதி சீட்டு பெறுவது வழக்கம். இதில் சுற்றுலா பயணிகள் பல மணி நேரம் காத்திருந்து அனுமதிச்சீட்டை பெற்று சென்றனர். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சோதனைச் சாவடியில் இருந்து ஆழியார் பூங்கா வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் மிகவும அவதிப்பட்டதோடு திணறினார்கள். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:- தென்மேற்கு பருவமழை முடிந்து குரங்கு நீர்வீழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர். ஆழியார் சோதனை சாவடியில் அனுமதி பெறுவதற்கு பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஏனெனில் ஒரு அனுமதி சீட்டு பெறும் எந்திரத்தை வைத்து அனுமதி சீட்டு அளிப்பதால் வாகன ஓட்டிகள் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. இதனைத் தவிர்க்க விடுமுறை நாட்களில் கூடுதல் அனுமதி சீட்டு எந்திரம் அமைத்து கொடுத்தால் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. போக்குவரத்து நெரிசலும் ஏற்படாது. அதனால் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story