தொடர் மழை எதிரொலி: 70 அடியாக உயர்ந்த வைகை அணை நீர்மட்டம்
தொடர் மழை எதிரொலியாக வைகை அணை நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்தது
ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. திண்டுக்கல், தேனி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீர், பாசன ஆதாரமாக இந்த் அணை திகழ்கிறது. இந்த ஆண்டில் 2 முறை அணை தனது முழுக்கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து அணையில் இருந்து உபரிநீர் ஆற்றில் திறக்கப்பட்டது. மேலும் பாசனத்திற்காக கால்வாய் வழியாகவும் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பின்னர் மழை பெய்யாததால் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது.
இந்நிலையில் தேனி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 71 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் நேற்று காலை 70 அடியாக உயர்ந்தது. இதனையடுத்து வைகை அணைக்கு வந்த தண்ணீர் அப்படியே உபரியாக ஆற்றில் திறக்கப்பட்டது.
தற்போது வைகை அணையில் இருந்து வினாடிக்கு 2,320 கனஅடி தண்ணீர் உபரியாக திறக்கப்பட்டுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் திறக்கப்படும் உபரிநீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே வைகை ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று 5 மாவட்ட மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.