குற்றாலம் அருவிகளில் தொடர் வெள்ளப்பெருக்கு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
குற்றாலம் அருவிகள்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதுபோல் அண்டை மாநிலமான கேரளாவிலும் பல்வேறு இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குற்றாலத்தில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அதாவது, கடந்த 6-ந் தேதி முதல் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளிலும் நேற்று முன்தினம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தொடர் வெள்ளப்பெருக்கு
நேற்று காலையிலும் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்தது. இதனால் மெயின் அருவியில் தொடர்ந்து 5-வது நாளாகவும்,ஐந்தருவியில் 2-வது நாளாகவும் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க நேற்றும் போலீசார் தடை விதித்தனர்.
எனினும் பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவிகளில் தண்ணீர் நன்றாக விழுந்ததால் அங்கு சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
உடைமாற்றும் அறை சேதம்
இதற்கிடையே, குற்றாலம் மெயின் அருவிக்கரை அருகில் பெண்கள் குளிக்கும் பகுதியில் பெண்கள் உடை மாற்றும் அறை உள்ளது. இந்த அறையின் மேற்பகுதியில் ஆஸ்பெட்டாஸ் சீட் மூலம் மேற்கூரை அமைக்கப்பட்டு இருந்தது. இதன் மீது ஒரு மரக்கிளை நேற்று முன்தினம் இரவு விழுந்துள்ளது. இதனால் மேற்கூரை சேதம் அடைந்து உள்ளது.