2-வது நாளாக தொடர் மழை


2-வது நாளாக தொடர் மழை
x
தினத்தந்தி 3 Nov 2022 12:15 AM IST (Updated: 3 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் 2-வது நாளாக தொடர் மழை பெய்ததால் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது

விழுப்புரம்

விழுப்புரம்

வடகிழக்கு பருவமழை

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் 5-ந் தேதி (நாளை மறுநாள்) வரை அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளையும் தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் மிதமான மழை பெய்தது. நள்ளிரவில் சில இடங்களில் இடி-மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.

2-வது நாளாக

நேற்றும் 2-வது நாளாக இந்த மழை நீடித்தது. இதனால் மாணவ- மாணவிகளின் நலனை கருதி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்தது. விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை விட்டுவிட்டு சாரல் மழையாக தூறியது. அதன் பிறகு 11 மணிக்கு மேல் மிதமான மழையாக சுமார் 1 மணி நேரம் இடைவிடாமல் தூறிக்கொண்டே இருந்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் வழிந்தோடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கத்தொடங்கியது. தொடர் மழையினால் விழுப்புரம் புதிய பஸ் நிலையம், கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளிட்ட இடங்களிலும் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். உடனே நகராட்சி ஊழியர்கள் விரைந்து சென்று மின்மோட்டார் மூலம் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றச்செய்தனர்.

ஆறுகளில் நீர்வரத்து அதிகரிப்பு

மேலும் திண்டிவனம், மரக்காணம், வானூர், விக்கிரவாண்டி, செஞ்சி, மேல்மலையனூர், திருவெண்ணெய்நல்லூர் உள்பட மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. அதுபோல் ஏற்கனவே தென்பெண்ணையாறு மற்றும் அதன் கிளை ஆறுகளான மலட்டாறு, பம்பை ஆறு, நரியாறுகளில் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் ஆற்றின் கரையோர பகுதிகளை மாவட்ட நிர்வாகத்தினர் தீவிரமாக கண்காணித்து வருவதோடு கரையோர பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

மழை அளவு

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

வளத்தி- 43

மரக்காணம்- 42

திண்டிவனம்- 38

அனந்தபுரம்- 33

முகையூர்- 33

கெடார்- 28

வல்லம்- 27

செம்மேடு- 23.20

செஞ்சி- 22

அவலூர்பேட்டை- 17

சூரப்பட்டு- 16

வானூர்- 16

கஞ்சனூர்- 13

நேமூர்- 11

கோலியனூர்- 10

முண்டியம்பாக்கம்- 9

விழுப்புரம்- 8.90

வளவனூர்- 8

மணம்பூண்டி- 4

அரசூர்- 4

திருவெண்ணெய்நல்லூர்- 11


Related Tags :
Next Story