புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் மழை
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் மழை பெய்தது. அறந்தாங்கியில் கடலை செடிகள் மழைநீரில் மூழ்கியது.
தொடர் மழை
புதுக்கோட்டையில் இன்று காலையில் லேசான சாரல் மழை பெய்தது. அதை தொடர்ந்து காலை சுமார் 8 மணி அளவில் மிதமான மழை பெய்ய தொடங்கியது. பின் நேரம் செல்ல செல்ல பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் சூழ்ந்தது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் குடை பிடித்தபடியும், மழை கோட் அணிந்தும் சென்றனர். புதுக்கோட்டையில் பெய்த தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
அறந்தாங்கி
அறந்தாங்கி பகுதியில் கனமழை பெய்தது. இன்று காலை முதல் மாலை வரையில் மழை பெய்ததால் அறந்தாங்கி நகர் பகுதியில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கியது. அறந்தாங்கி அருகே விஜயபுரம் பகுதியில் பெய்த கனமழையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட கடலை செடிகள் மற்றும் நெற்பயிர்கள், வைக்கோல் மழை நீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். மேலும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆவுடையார்கோவில்
ஆவுடையார்கோவில் சுற்றுவட்டார பகுதியில் கன மழை பெய்தது. இந்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
மணமேல்குடி
மணமேல்குடி பகுதியில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த பலத்த மழையிலும் மாணவர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்று எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படவில்லை. இதையடுத்து மாணவர்கள் பள்ளிக்கு மழையில் நனைந்து சென்றனர். மணமேல்குடியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விடுமுறை விடப்பட்டதால் மாணவிகள் மழையில் நனைந்து திரும்பி சென்றனர். அதேபோல் மணமேல்குடியில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகளும் விடுமுறை விடப்பட்டது.
ஆலங்குடி
ஆலங்குடி, திருவரங்குளம், வம்பன், செம்பட்டிவிடுதி, இச்சடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. மாணவர்கள் கொட்டும் மழையிலும் நனைந்தபடி பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றனர். இந்த மழையால் ஆலங்குடி பகுதிகளில் பல ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் முழ்கியது. இதனால் விவசாயிகள் செய்வது அறியாமல் உள்ளனர். நெல் கொள்முதல் நிலையங்கள் தாமதமாக திறக்கப்பட்டதால் ஏற்கனவே பல விவசாயிகள் நெல் மணிகளை குறைந்த விலைக்கு தனியாருக்கு விற்று விட்டனர். இந்நிலையில் மீதம் உள்ள விவசாயிகள் நெல் மணிகளை நெல் கொள்முதல் நிலையங்களில் குவித்து வைத்துள்ளனர். அந்த நெல் மணிகளும் மழையில் நனைந்து பாதிக்கக்கூடும் என்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
மழை அளவு விவரம்
மாவட்டத்தில் காலை 8 மணி முதல் மாலை 6 வரை மற்ற இடங்களில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) ஆதனக்கோட்டை 23, பெருங்களூர் 15.40, புதுக்கோட்டை 25, ஆலங்குடி 59, கந்தர்வகோட்டை 30, கறம்பக்குடி 23.20, மழையூர் 45.40, கீழாநிலை 53.60, திருமயம் 33.40, அரிமளம் 22.80, அறந்தாங்கி 53.90, ஆயங்குடி 46.20, நாகுடி 39.80, மீமிசல் 47.40, ஆவுடையார்கோவில் 44.60, மணமேல்குடி 58, இலுப்பூர் 18, குடுமியான்மலை 20, அன்னவாசல் 18.10, உடையாளிப்பட்டி 7, கீரனூர் 17, பொன்னமராவதி 7, காரையூர் 17.80 பெய்துள்ளது. ஆலங்குடியில் அதிகப்பட்சமாக 59 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.