வால்பாறையில் தொடர் மழை


வால்பாறையில் தொடர் மழை
x

வால்பாறையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வால்பாறையில் கனமழை

வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வபோது விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேலும் தொடர் மழையின் காரணமாக சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

மழையினால் சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு வீடுகள் சேதம் அடைந்தன. இதையடுத்து அந்த வீடுகளில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

இந்த நிலையில் வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வாழைத்தோட்டம் ஆறு, கூழாங்கல் ஆறு, ஸ்டேன்மோர் ஆறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடுகிறது. எனவே கரையோர பகுதிகளில் வசிக்கும் பாதுகாப்பாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

வால்பாறை பகுதிக்கு குடிதண்ணீர் வழங்கும் அக்காமலை தடுப்பு அணை நிரம்பி வழிந்து வருகிறது. வால்பாறை சுற்று வட்டார பகுதி முழுவதும் கடுமையான குளிர் வாட்டி வருகிறது. வால்பாறை பொள்ளாச்சி மலைப்பாதை சாலையில் பனிமூட்டமும் நிலவுகிறது.

மண்சரிவு

கனமழை காரணமாக நேற்று முன்தினம் சிறுவர் பூங்கா பகுதியில் தடுப்பு சுவர் சரிந்து விழுந்து 2 வீடுகள் அந்தரத்தில் தொங்கின. இந்த நிலையில் நேற்று பெய்த மழையில் மண்சரிவு ஏற்பட்டு மேலும் ஒரு பகுதி தடுப்பு சுவர் சரிந்து விழுந்்தது. இதனால் 2 வீடுகளும் இடிந்து சேதமானது.

அதேபோல் வால்பாறை பொள்ளாச்சி சாலையில் துளசிங்நகர் பகுதியில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. இதனால் சில வீடுகள் சேதமடைந்த நிலையில் அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கிறது. குடியிருப்பு பகுதி மக்களின் நடைபாதையும் சேதமடைந்தது.

போக்குவரத்து பாதிப்பு

பொள்ளாச்சி-வால்பாறை மலைப்பாதையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 37-வது கொண்டை ஊசி வளைவு பகுதி அருகே மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்்து கொட்டும் மழையிலும் மரத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.

கருமலை இறைச்சல் பாறை நீர் வீழ்ச்சியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சோலையாறு அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. சோலையாறு அணைக்கு வினாடிக்கு 4,036 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சோலையாறு மின் நிலையம்-1 இயக்கப்பட்டு 404.79 கன அடித்தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கும், சோலையாறு மின் நிலையம்-2 இயக்கப்பட்டு 438.67 கனஅடி தண்ணீர் கேரளாவிற்கும் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோலையாறு அணையின் நீர்மட்டம் 134.07 அடியாக இருந்து வருகிறது. கடந்த 6 நாட்களில் சோலையாறு அணையின் நீர்மட்டம் 22 அடி உயர்ந்துள்ளது. வால்பாறை பகுதியில் கனமழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து விட்டது.

மழையளவு

நேற்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-

மேல்நீரார்- 117, கீழ்நீரார்- 97, வால்பாறை- 77, சோலையாறு அணை- 72 மழை பதிவானது.


வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகூடங்கள் மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும், கனமழை சமயங்களில் பள்ளிகளுக்கும் கல்லூரிக்கும் மாணவ-மாணவிகள் வந்து செல்லும் சிரமத்தை கருத்தில் கொண்டும் கோவை மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) 2 நாட்கள் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கும், கல்லூரிக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை வால்பாறை தாசில்தார் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.


Next Story