நீலகிரியில் தொடர் மழை; மலை ரெயில் பாதையில் மண், கற்கள் விழுந்தன


நீலகிரியில் தொடர் மழை; மலை ரெயில் பாதையில் மண், கற்கள் விழுந்தன
x

நீலகிரியில் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டன. மலை ரெயில் பாதையில் மண், கற்கள் விழுந்தன.

நீலகிரி

ஊட்டி: நீலகிரியில் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டன. மலை ரெயில் பாதையில் மண், கற்கள் விழுந்தன.

நீலகிரியில் தொடர் மழை

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும். கோவை, நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்றுமுன்தினம், நேற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், பந்தலூர், கோத்திகிரி பகுதிகளில் பரவலாக குளிர்காற்றுடன் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து கொண்டே வருகிறது.

மேலும் நேற்றுமுன்தினம் காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் மற்றும் மந்தாரமுமாக காணப்படுகிறது. தொடர் மழை காரணமாக ஊட்டியில் சாலையோரம் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. அவற்றை போக்குவரத்துதுறை அதிகாரிகள், ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சாலையில் மழை வெள்ளம் தேங்கி, தாழ்வான இடங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளின் வரத்து குறைந்துள்ளது.

மலை ரெயில் பாதையில் மண், கற்கள்

இதற்கிடையே தொடர் மழையின் காரணமாக குன்னூர்- மேட்டுப்பாளையம் மலை ெரயில் பாதையான ஹில்குரோவ், காட்டேரி ஆகிய இடங்களில் நேற்று காலை மண்சரிவு ஏற்பட்டது. மேலும் மலையில் இருந்து கற்கள், மலை ரெயில் பாதையிலேய விழுந்தன.

இதுகுறித்து ரோந்து சென்ற ரெயில்வே ஊழியர்கள், குன்னூர் ரெயில் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து 10-க்கும் மேற்ப்பட்ட ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சூழ்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூரை நோக்கி வந்த மலை ெரயில் பாதியில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மண் மற்றும் கற்களை முழுமையாக அகற்றிய பிறகு ஒரு மணி நேரம் தாமதமாக அதாவது காலை 11.20 மணிக்கு குன்னூர் வந்து சேர்ந்தது. பின்னர் குன்னூரில் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு ஊட்டிக்கு சென்றது.

மழை அளவு விவரம்

இதேபோல் இன்னும் 2 நாளைக்கு நீலகிரியில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நீலகிரியில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த அதிகபட்ச மழை அளவு விவரம் மில்லி மீட்டர் அளவில் வருமாறு:-

ஊட்டி-36, கல்லட்டி-7, கிளன்மோர்கன்-29, மசினகுடி-15,கிண்ணக்கொரை-10, குன்னூர்-32, பர்லியார்-42, கேத்தி-24, பந்தலூர்-55, சேரங்கோடு-22.


Next Story