மாவட்டத்தில் தொடர் மழை: ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் 21 ஏரி, குளங்கள் நிரம்பின


மாவட்டத்தில் தொடர் மழை:  ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்  21 ஏரி, குளங்கள் நிரம்பின
x
தினத்தந்தி 12 Nov 2022 6:45 PM GMT (Updated: 12 Nov 2022 6:48 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் 21 ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளன.

கடலூர்

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையே கடந்த 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் விளை நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீர் அனைத்தும் அந்தந்த பகுதிகளில் உள்ள வடிகால் வாய்க்கால் மற்றும் ஓடைகள் மூலமாக வெளியேற்றப்படுகிறது. அவ்வாறு வடிகால் மற்றும் ஓடைகள் மூலம் வெளியேற்றப்படும் மழைநீரானது ஆறுகளில் கலப்பதால், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அந்த வகையில் சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீராலும், தொடர் மழையாலும் கடலூர் தென்பெண்ணையாற்றில் இருகரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கரையோர மக்கள் ஆற்றங்கரைக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

மேலும் கடலூர் மாநகரை 2-ஆக பிரித்தபடி செல்லும் கெடிலம் ஆற்றில் கடந்த சில நாட்களாக வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் சென்ற நிலையில், தொடர் கனமழையால் நேற்று வினாடிக்கு 600 கனஅடி தண்ணீர் சென்றது. தொடர்ந்து விளைநிலங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் தேங்கிய மழைநீர் கெடிலம் ஆற்றில் வடிவதால், ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க கூடும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வெள்ளியங்கால் ஓடையில் வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியும், சேத்தியாத்தோப்பு வி.என்.எஸ். மதகு வழியாக வினாடிக்கு 2100 கனஅடி தண்ணீரும் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதுதவிர வெள்ளாறு, உப்பனாறு உள்ளிட்ட ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

21 ஏரி, குளங்கள் நிரம்பின

இந்நிலையில் ஆறுகள் மற்றும் ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன. அந்த வகையில் மாவட்டத்தில் உள்ள 228 ஏரி, குளங்களில் தற்போது 21 ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன. 26 ஏரி, குளங்கள் 80 சதவீதத்திற்கும் மேல் நிரம்பியுள்ளன. தொடர்ந்து நீர்வரத்து வாய்க்கால்களில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் இந்த ஏரிகளும் இன்னும் ஓரிரு நாட்களில் நிரம்பி விடும் என பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனால் சம்பா சாகுபடி செய்ய உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story