வால்பாறையில் தொடர் மழை: தேயிலை உற்பத்தி அதிகரிப்பு
வால்பாறை பகுதியில் கனமழை காரணமாக தேயிலை செடிகளுக்கு உகந்த காலசூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் பச்சை தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது.
வால்பாறை
வால்பாறை பகுதியில் கனமழை காரணமாக தேயிலை செடிகளுக்கு உகந்த காலசூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் பச்சை தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது.
கனமழை
வால்பாறை பகுதியில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் இறுதி வாரத்தில் இருந்து கோடைகாலம் ஆரம்பித்து விடும். மார்ச் மாதத்தில் கடுமையான வெயில் வாட்டும். இந்த சமயத்தில் தேயிலை செடிகளை தாக்கக் கூடிய கொப்பள நோய், தேயிலை கொசு மற்றும் சிவப்பு சிலந்தி பூச்சி தாக்குதல் ஏற்பட்டு பச்சை தேயிலை இலை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்து வால்பாறை பகுதியில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த மழை பகலில் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை பெய்கிறது.காலை முதல் மதியம் வரை கடுமையான வெயில் வாட்டி வருகிறது.
பச்சை தேயிலை உற்பத்தி
இந்த காலசூழ்நிலை பச்சை தேயிலை உற்பத்திக்கு மிகவும் சாதகமான சூழ்நிலையாக இருப்பதால் வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் தேயிலை தோட்டங்களிலும் பச்சை தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது. ஒருசில தேயிலை தோட்ட பகுதியில் பச்சை தேயிலை உற்பத்தி அதிகரித்த போதும் தேயிலை செடிகளை நோய்களும் தாக்கி வருகிறது. இதனால் பச்சை தேயிலை இலைகளை பறித்து வரும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பறித்த இலைகளில் பூச்சி மற்றும் நோய் தாக்கிய இலைகளை தரம் பிரித்து எடுக்கும் பணியையும் செய்து வருகின்றனர். வழக்கத்திற்கு மாறாக கோடை காலத்தில் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது வால்பாறை வட்டார தேயிலை விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.