ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்
வந்தவாசி நகராட்சியில் மாத ஊதியம் குறைவாக வழங்குவதாக கூறி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலைக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
வந்தவாசி
வந்தவாசி நகராட்சியில் மாத ஊதியம் குறைவாக வழங்குவதாக கூறி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலைக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தூய்மை பணியாளர்கள்
வந்தவாசி நகராட்சியில் 24 வார்டுகளில் 240-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்கு நகராட்சி நிரந்தர தூய்மை பணியாளர்களுடன் 89 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டு தினமும் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரத்தைச் சேர்ந்த தனியார் ஒப்பந்த உரிமையாளர் ஒருவர் கடந்த 3 மாதங்களாக தூய்மை பணியாளர்களுக்கான மாத ஊதியத்தை வழங்குகிறார்.
ஆனால் கடந்த 3 மாதங்களாக ஊதியத்தை மிகக் குறைவாக வழங்கி வருவதாகவும், மாத ஊதியத்தை காலதாமதமாக வழங்குவதாகவும் கூறப்படுகிறது.
போராட்டம்
இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் வந்தவாசி நகராட்சிக்கு பணிக்கு வந்த ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் அனைவரும் மாத ஊதியம் குறைவாக வழங்குவதை கண்டித்து பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை தனியார் ஒப்பந்த பணி மேற்பார்வையாளர் சரவணன் சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் அவர்கள் சமரசம் ஆகாமல் அவரிடம் வாக்குவாதம் செய்தனர்.
தகவல் அறிந்த நகராட்சி தலைவர் ஜலால் வந்து பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது ஒப்பந்த உரிமையாளர்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
ஆனால் பணியாளர்கள் கடந்த 3 மாதமாக ஊதியத்தை உயர்த்தாமல் ஒப்பந்ததாரர் மிக குறைவாக வழங்கி வருகிறார். பேசியபடி ஊதியத்தை உயர்த்தி வழங்கினால் தான் வேலைக்கு செல்வோம் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தூய்மை பணி பாதிப்பு
பணியாளர்களின் போராட்டத்தால் தூய்மை பணி பாதிக்கப்பட்டது. பல இடங்களில் குப்பைகள் அகற்றாமல், சாக்கடைகள் தூர்வாராததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.
இதையடுத்து நிரந்தர பணியாளர்களை கொண்டு நகரின் முக்கிய சாலைகளான அச்சரப்பாக்கம் சாலை, காந்தி சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்த போராட்டம் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை நீடித்தது. பின்னர் ஒப்பந்ததாரர் வந்து கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தபின்னர் பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
சிறிதுநேரத்தில் அவர்கள் நகராட்சி அலுவலக வாயில் முன் அமர்ந்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், நகர்மன்ற தலைவர் எச்.ஜலால், வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், ஒப்பந்ததாரர் சரவணன் முன்னிலையில் தூய்மை பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது.
அப்போது ஒப்பந்ததாரர் நாங்கள் உங்களுக்காக சேம நல நிதியை பிடித்தம் செய்து மீதியுள்ள தொகையை உங்கள் கணக்கில் வைக்கிறோம். இனிமேல் குறிப்பிட்ட தேதிகளில் சம்பள பணத்தை உங்கள் வங்கி கணக்கில் செலுத்தி விடுகிறோம் என்று உத்தரவாதம் அளித்தார்.
இதை ஏற்று ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
காலை 6 மணிக்கு தொடங்கிய போராட்டம் இரவு 8 மணிக்கு வரை நடந்தது.
இதனால் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.