ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்
ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாமரைக்குளம்:
அரியலூர் நகராட்சியில் 84 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், நகரில் உள்ள 18 வார்டுகளிலும் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பழைய ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், புதிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பழைய ஒப்பந்ததாரர் இருந்தபோது, தூய்மை பணியாளர்களுக்கு புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் மதிய விடுமுறை அளிக்கப்பட்டு, மாதத்தில் 28 நாட்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது தூய்மை பணியாளர்களை அரசு விடுமுறை நாட்களில் முழு நேரமும் வேலை செய்ய வேண்டும் என்றும், மாதத்திற்கு 26 நாட்கள் மட்டுமே சம்பளம் என்றும் புதிய ஒப்பந்ததாரர் அறிவித்ததாக தெரிகிறது. இதையடுத்து ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நேற்று பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுடன் ஒப்பந்ததாரர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, 28 நாட்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் பணிக்கு சென்றனர். இந்த போராட்டத்தால் சுமார் 2 மணி நேரம் தூய்மை பணி பாதிக்கப்பட்டதோடு, பரபரப்பும் ஏற்பட்டது. போராட்டம் முடித்து பணிக்கு திரும்பியபோது தூய்மை பணிக்கான வாகனம் 'ஸ்டார்ட்' ஆகாததால், அந்த வாகனத்தை தள்ளி 'ஸ்டார்ட்' செய்து பணிக்கு சென்றனர்.