ஒப்பந்த தொழிலாளி மின்சாரம் தாக்கி சாவு
மின்கம்பத்தில் பழுது பார்த்துக்கொண்டிருந்த ஒப்பந்த தொழிலாளி மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார். அவரது குடும்பத்தினருக்கு அமைச்சர் பொன்முடி நேரில் ஆறுதல் கூறினார்
திருக்கோவிலூர்
ஒப்பந்த தொழிலாளி
திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் போலீஸ் சரகம் வீரபாண்டி கிராமம் மன்மதன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னதுரை மகன் யுவராஜ்(வயது 21). இவர் மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளியாக கடந்த 6 மாதங்களாக வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் யுவராஜ் நேற்று முன்தினம் அதே ஊரில் உள்ள செல்லத்துரை என்பவர் வீட்டின் எதிரே உள்ள மின்கம்பத்தில் ஏறி பழுது பார்த்துகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் மின்கம்பியில் தொங்கிக்கொண்டிருந்தார்.
பொதுமக்கள் மீட்பு
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ஓடி சென்று மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் அவர்களில் 2 பேர் மின் கம்பத்தில் ஏறி மின்கம்பியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொங்கிக்கொண்டிருந்த யுவராஜை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் பொன்முடி ஆறுதல்
இந்த நிலையில் இந்த சம்பவத்தை அறிந்து உயிர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி யுவராஜின் வீட்டிற்கு சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதோடு அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறி தனது சொந்த செலவில் ரூ.1 லட்சம் நிவாரண உதவியை வழங்கினார். பின்னர் யுவராஜின் குடும்பத்துக்கு வரவேண்டிய நஷ்ட ஈட்டு தொகை மற்றும் அந்த குடும்பத்துக்கு அரசு பணி கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, புகழேந்தி எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர்கள் பிரபு, ரவிச்சந்திரன், திருக்கோவிலூர் நகராட்சி தலைவர் டி.என்.முருகன், அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு, மாவட்ட வர்த்தக அணி தலைவர் வீரபாண்டி நடராஜன், ஒன்றிய தி.மு.க. அவை தலைவர் சக்திசிவம், பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகர் உள்பட பலர் உடன் இருந்தனர்.