ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்
திருமக்கோட்டையில் மின்உற்பத்தி நிலையத்தை மீண்டும் திறக்கக்கோரி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமக்கோட்டை:
திருமக்கோட்டையில் மின்உற்பத்தி நிலையத்தை மீண்டும் திறக்கக்கோரி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மின் உற்பத்தி நிலையம்
திருமக்கோட்டையில் 110 மெகா வாட் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையம் கடந்த 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த மின் உற்பத்தி நிலையத்தில் 150-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த முறையில் பணிபுரிந்து வந்தனர்.கோவில் களப்பால் கிராமத்தில் செயல்பட்டு வரும் கெயில் கம்பெனியில் இருந்து கியாசை குழாய் திருமக்கோட்டை மின் உற்பத்தி நிலையத்திற்கு கொண்டு வந்து அங்கு மின்சாரம் தயாரிக்கப்பட்டது.
மூடப்பட்டது
இந்த நிலையில் கடந்த மாதம்(ஜூலை) 31-ந்தேதியுடன் கெயில் கம்பெனியுடனான ஒப்பந்தம் முடிவடைந்ததால் மின் உற்பத்தி நிலையம் மூடப்பட்டது. இதனால் மின் உற்பத்தி நிலையத்தில் பணியாற்றி வந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 150 பேர் வேலை இழந்துள்ளனர்.
இங்கு உள்ள மின்சாதனங்களை வடசென்னை மின் உற்பத்தி நிலையத்திற்கு மாற்றப்போவதாகவும், இங்கு வேலை பார்த்த நிரந்தர அதிகாரிகள் சென்னைக்கு மாற்றப்போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்
இதை தொடர்ந்து வேலை இழந்த ஒப்பந்த தொழிலாளர்கள் திருமக்கோட்டை மின் உற்பத்தி நிலையம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மின்உற்பத்தி நிலையத்தை திறக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.