ஒப்பந்த தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்-ஆணைய தலைவர் வெங்கடேசன் பேட்டி


ஒப்பந்த தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்-ஆணைய தலைவர் வெங்கடேசன் பேட்டி
x

ஒப்பந்த தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்று தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் கூறினார்.

மதுரை

ஒப்பந்த தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்று தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் கூறினார்.

ஆய்வுக்கூட்டம்

மதுரை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் நலன் சார்ந்த ஆய்வுக் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் சங்கீதா முன்னிலை வகித்தார். தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் பிரவீன் குமார், போலீஸ் துணை கமிஷனர் பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பின் ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இன்றைய கூட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் சம்பளம் பற்றி முக்கிய விவாதம் நடந்தது. ஏராளமானோர் சம்பளம் குறைவாக கொடுப்பதாக குற்றம் கூறினர். கடந்த ஏப்ரல் மாதத்திற்கு முன்பு வரை ஒரு நாளைக்கு ரூ.409 சம்பளமாக கொடுத்து கொண்டு இருந்தார்கள். அதன்பின் தற்போது ரூ.558 தர வேண்டும். இந்த சம்பளத்தை ஊழியர்களுக்கு தருகிறார்களா என கண்காணிக்க சொல்லி இருக்கிறோம். ஊழியர்களுக்கு தொழிலாளர் வைப்பு நிதி மற்றும் இ.எஸ்.ஐ. தொகையை சரியாக பிடித்தம் செய்ய சொல்லி இருக்கிறோம். மேலும் அனைத்து ஊழியர்களுக்கும் கட்டாயம் காப்பீடு செய்ய வெண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறோம்.

சிக்கல்கள்

ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்களை நியமனம் செய்வதை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் வலியுறுத்தி உள்ளோம். அனைத்து ஒப்பந்த தூய்மை பணியாளர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்வதில் நாடு முழுவதும் ஊழல் நடக்கிறது. மத்திய அரசு, தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் சம்பளத்தை நிர்ணயித்து உள்ளது. ஆனால் ஒப்பந்தகாரர்கள் அந்த சம்பளத்தை தருவதில்லை. எனவே அனைத்து ஊழியர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளிடம் வலியுறுத்தி உள்ளோம். ஆனால் அவர்கள் அதில் பல சிக்கல்கள் இருப்பதாக கூறுகிறார்கள்.

தூய்மை பணியாளர்கள்

கர்நாடக, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ஒப்பந்த ஊழியர்களை நியமனம் செய்ய அந்த மாநில அரசு ஒரு தனி அமைப்பை நடத்துகிறது. அந்த அமைப்பு மூலம் ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு நேரடியாக வங்கி கணக்கில் சம்பளம் செலுத்தப்படுகிறது. இந்த திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும் என்று மாநில அரசிடம் கேட்டு கொண்டு இருக்கிறோம். அதேபோல் மத்தியில் தேசிய துப்புரவு கமிஷன் இருப்பது போல 11 மாநிலங்களில் மாநில துப்புரவு ஊழியர்கள் கமிஷன் உள்ளது. இதேபோல் தமிழகத்திலும் ஒரு கமிஷன் அமைக்க வேண்டும். தமிழகத்தில் துப்புரவு ஊழியர்களுக்கு நல வாரியம் உள்ளது. ஆனால் அதற்கு அதிகாரங்கள் கிடையாது.

எனவே உடனடியாக தமிழகத்தில் தூய்மை பணியாளர்கள் ஆணையம் அமைக்க வேண்டும். கடந்த காலங்களில் ஒரு நிரந்தர தூய்மை பணியாளர்கள் ஓய்வு பெற்றால், அந்த பணியிடத்திற்கு ஒரு நிரந்தர ஊழியரை நியமனம் செய்வார்கள். ஆனால் இப்போது ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கிறார்கள். அதனை ஏற்று கொள்ள முடியாது. நிரந்தர ஊழியர்கள் பணியிடத்தில் நிரந்தர ஊழியரை தான் நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story