ஒப்பந்த பணியாளர்கள் மீண்டும் காத்திருப்பு போராட்டம்
கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்க கோரி ஒப்பந்த பணியாளர்கள் மீண்டும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை
கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்க கோரி ஒப்பந்த பணியாளர்கள் மீண்டும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காத்திருப்பு போராட்டம்
கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் காவலாளிகள் அரசு அறிவித்த ஊதியம் வழங்க கோரியும், பணி நிரந்தரம் செய்ய கோரியும் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் உள்நோயாளிகள் வார்டுகளில் இருந்து ஸ்கேன் பரிசோதனை கூடம் உள்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்து செல்ல முடியாமல் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த பணியாளர்கள் கூறியதாவது:- கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக சுமார் 300-க்கும் மேற்பட்டோர்கள் பணிபுரிந்து வருகிறோம்.
அடிப்படை ஊதியம்
இந்தநிலையில் எங்களுக்கு அரசு கூறிய அடிப்படை ஊதியமாக தினசரி ரூ.721 வழங்க வேண்டும். ஆனால் ரூ.421 மட்டுமே வழங்கப்படுகிறது. நாங்கள் ரூ.721 வழங்க வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினோம். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் தலையிட்டு ரூ.721 ஊதியம் வழங்க அறிவுறுத்தியதையடுத்து போராட்டங்களை கைவிட்டோம்.
ஆனால் மாவட்ட கலெக்டர் அறிவித்த ஊதியம் தற்போது வரை வழங்கப்படவில்லை. எனவே உயர்த்தப்பட்ட ஊதியத்தை உடனே வழங்க கோரி மீண்டும் போராட்டத்தில் குதித்து உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி
கோவை அரசு ஆஸ்பத்திரியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த பணியாளர்களிடம் டீன் நிர்மலா பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் வருகிற 10-ந் தேதி ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் சென்னையில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு ஒப்பந்த பணியாளர்கள் பணிக்கு திரும்பினர்.
கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் மொத்தம் 80 ஒப்பந்த பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் தற்போது 10 பேர் விடுப்பில் உள்ளனர். நேற்று அங்கு நடந்த போராட்டத்தில் 20 பேர் பங்கேற்றனர். மீதமுள்ள 50 பேர் வழக்கம்போல் பணிக்கு திரும்பியதாக டீன் ரவீந்திரன் தெரிவித்தார்.