பெண் நிர்வாகியுடன் சர்ச்சை பேச்சு: பா.ஜ.க.வில் இருந்து சூர்யா சிவா நீக்கம்


பெண் நிர்வாகியுடன் சர்ச்சை பேச்சு: பா.ஜ.க.வில் இருந்து சூர்யா சிவா நீக்கம்
x

பா.ஜ.க.வில் இருந்து சூர்யா சிவா 6 மாத காலத்துக்கு நீக்கப்படுகிறார் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக பா.ஜ.க. சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரணுக்கும், ஓ.பி.சி. அணியின் மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவாவுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்று பொதுவெளியில் வெளியிடப்பட்டது. இந்த சம்பவத்தை விசாரித்து கட்சி தலைமைக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. மாநில துணைத்தலைவரும், ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவருமான கனக சபாபதியிடம் 22.11.22 அன்று தெரிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் திருப்பூரில் ஒழுங்கு நடவடிக்கை குழு முன் சூர்யா சிவா மற்றும் டெய்சி சரண் ஆகிய இருவரும் ஆஜராகி இந்த சம்பவம் குறித்த விளக்கத்தை அளித்தனர். அவர்கள் இருவரும் நடந்தவற்றை எல்லாம் மறந்து சுமுகமாக சகோதர சகோதரிகளாக பயணிக்க விரும்புவதாக ஒழுங்கு நடவடிக்கை குழுவினரிடமும் பின், பத்திரிகையாளர்களிடமும் தெரிவித்தனர். நடந்தவை மறந்துவிட்டு சுமுகமாக செல்ல அவர்கள் விருப்பப்பட்டாலும் அந்த தொலைபேசி உரையாடல் சரி என்று நாமே ஒப்புக்கொள்வதை போல் ஆகிவிடும்.

6 மாத காலத்துக்கு நீக்கம்

பெண்களை தெய்வமாக போற்றும் கட்சி நமது பா.ஜ.க.. தமிழகத்தில் உள்ள சில திராவிட கட்சிகளை போல் நாமும் பெண்களின் மேல் எய்யப்படும் அவதூறுகளை கண்டும் காணாதவர்களை போல் கடந்து செல்ல மாட்டோம். பெண்களை பொது மேடைகளில் கொச்சைப்படுத்துபவர்கள், ஆபாச காணொலியில் காட்சி அளித்தவர்கள், பெண்களை தரக்குறைவாக தொலைபேசியில் பேசியவர்கள், கட்சி கூட்டத்தில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டவர்கள் போன்றோரின் கூடாரமாக தி.மு.க. செயல்பட்டு கொண்டிருக்கிறது.

பெண்களை இழிவுபடுத்துவதை பா.ஜ.க. ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது மற்றும் சுமுகமாக சென்றுவிட்டோம் என்று சொன்னாலும் அதை பா.ஜ.க. மாநில தலைவராக நான் ஏற்க மறுக்கிறேன். நற்பண்புகளுடன் நூற்றுக்கணக்கான தலைவர்களை உருவாக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆதலால் ஒரு மாநில தலைவராக சில கடின முடிவுகளை எடுக்கவேண்டிய பொறுப்பும் எனக்கு உள்ளது.

ஆகவே தமிழக பா.ஜ.க. ஓ.பி.சி. அணி மாநில பொது செயலாளர் சூர்யா சிவா, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளதை அவர் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் அவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாத காலத்துக்கு நீக்கப்படுகிறார். கட்சியின் ஒரு தொண்டனாக கட்சியின் வளர்ச்சிக்கு அவர் பணியாற்றலாம். அவரது நடவடிக்கைகளில் மாற்றம் கண்டால், அவர் மேல் எனக்கு மீண்டும் நம்பிக்கை வந்தால், பொறுப்பு அவரை தேடிவரும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story