வால்பாறையில் கோவில் திருவிழாவில் தகராறு:போலீஸ்காரரை தாக்க முயன்ற 2 பேர் கைது
வால்பாறையில் கோவில் திருவிழாவில் தகராறில் ஈடுபட்டதோடு போலீஸ்காரரை தாக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வால்பாறை
வால்பாறையில் கோவில் திருவிழாவில் தகராறில் ஈடுபட்டதோடு போலீஸ்காரரை தாக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவில் திருவிழா
வால்பாறை அருகில் உள்ள ஈட்டியார் எஸ்டேட் பகுதியில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கடந்த 3 நாட்களாக எஸ்டேட் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வந்தது. திருவிழாவின் இறுதி நாளான நேற்று முன்தினம் இரவு சாமி வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சாமி ஊர்வலமாக வந்து கொண்டிருந்த போது ஊர்வலத்தின் முன் முடீஸ் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வால்பாறை நகர் பகுதியில் உள்ள அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 18), கக்கன்காலனியைச் சேர்ந்த தினேஷ்குமார் (28) இருவரும் சாமி ஊர்வலத்திற்கு வழிவிடாமல் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
2 பேர் கைது
இதைப் பார்த்த போலீஸ்காரர் சுரேஷ்குமார் (32) அவர்கள் இருவரையும் வழிவிட்டு செல்லுமாறு கூறியுள்ளார்.இந்த நிலையில் அவர்கள் இருவரும் போலீஸ் சுரேஷ்குமாரிடம் தகராறில் ஈடுபட்டு சட்டையை பிடித்து இழுத்து தாக்க முயன்று உள்ளனர். இதை கவனித்த அருகில் இருந்த போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து முடீஸ் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் பாதுகாப்பு பணியை செய்யவிடாமல் தடுத்தது, பொது இடத்தில் தகராறில் ஈடுபட்டது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் தகராறு செய்து தாக்க முயற்சித்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கார்த்திக், தினேஷ்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.