வளவனூர் அருகே கைப்பந்து விளையாட்டில் தகராறு; 7 பேர் கைது


வளவனூர் அருகே    கைப்பந்து விளையாட்டில் தகராறு; 7 பேர் கைது
x
தினத்தந்தி 5 Oct 2023 12:15 AM IST (Updated: 5 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வளவனூர் அருகே கைப்பந்து விளையாட்டின்போது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்

தகராறு

வளவனூர் அருகே உள்ள வி.புதுப்பாளையத்தை சேர்ந்தவர் கலைச்செல்வன் (வயது 56). இவருடைய மகன் ஸ்ரீநாத்தும் (23), அதே பகுதியை சேர்ந்த தேவநாதன் (27), சாந்தகுமார் (23), சம்பத் (25) ஆகியோரும் நண்பர்கள் ஆவர். இவர்கள் ஒன்றாக கைப்பந்து விளையாடுவார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் ஸ்ரீநாத், ஈரமான கைப்பந்தை எடுத்து விளையாடியுள்ளார். அதற்கு தேவநாதன் உள்ளிட்ட 3 பேரும் மறுப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் ஸ்ரீநாத், அந்த ஈரமான கைப்பந்திலேயே விளையாடியுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் தேவநாதன் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து ஸ்ரீநாத்தை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு ஸ்ரீநாத் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த புவனேஷ் (26), சஞ்சய் (21), பிரேம்குமார் (23) ஆகியோர் சேர்ந்து தேவநாதன், சம்பத், சாந்தகுமார் ஆகியோரை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ஸ்ரீநாத் மற்றும் தேவநாதன், சம்பத், சாந்தகுமார் ஆகிய 4 பேரும் காயமடைந்தனர்.

7 பேர் கைது

இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். ஸ்ரீநாத்தின் தந்தை கலைச்செல்வன் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவநாதன், சாந்தகுமார், சம்பத் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அதேபோல் தேவநாதன் கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீநாத், புவனேஷ், சஞ்சய், பிரேம்குமார் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story