செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 ஆரம்ப சுகாதார நிலையங்களில் இயன்முறை சிகிச்சை பிரிவு மையம்


செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 ஆரம்ப சுகாதார நிலையங்களில் இயன்முறை சிகிச்சை பிரிவு மையம்
x

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்துகொண்டு இயன்முறை சிகிச்சை பிரிவு மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

செங்கல்பட்டு

தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கிராமத்தில் அமைந்துள்ள தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதியோர்களுக்கான இயன்முறை சிகிச்சை பிரிவு மையம் தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தலைமை தாங்கினார். செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் முன்னிலை வைத்தார். சிறப்பு அழைப்பாளராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்துகொண்டு இயன்முறை சிகிச்சை பிரிவு மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் சிகிச்சை மையத்தில் உள்ள பல்வேறு உபகரணங்களை பார்வையிட்டு அதனுடைய செயல்பாடுகள் குறித்து மருத்துவ அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் நடக்க முடியாமல் உள்ள முதியோர்களுக்காக ஊன்றுகோல் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சில நாட்களுக்கு முன்பு பிறந்த குழந்தைகளுக்கு ஆடைகள், பவுடர், சோப்பு உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினார்.

இதில் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் பரணிதரன், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர மன்ற துணைத்தலைவர் வக்கீல் ஜி.கே.லோகநாதன், வட்டார மருத்துவர் ராஜேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் கீதா ஜீவன் நிருபர்களிடம் கூறியதாவது:- செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நந்திவரம், காட்டாங்கொளத்தூர், கேளம்பாக்கம், அச்சரப்பாக்கம், பரங்கிமலை, மதுராந்தகம் ஆகிய 6 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.9 லட்சத்து 51 ஆயிரம் மதிப்பில் தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் முதியோர்களுக்கான இயன் முறை சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதனை முதியோர்கள், குழந்தைகள் அனைவரும் பயன்படுத்தி கொண்டு சிகிச்சை பெறலாம் இவ்வாறு அவர் கூறினார்.


Next Story