சிறையில் குற்றவாளிகள் திருந்த வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்- டி.ஜி.பி. அமரேஷ் பூஜாரி பேச்சு


சிறையில் குற்றவாளிகள் திருந்த வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்- டி.ஜி.பி. அமரேஷ் பூஜாரி பேச்சு
x

சிறையில் குற்றவாளிகள் திருந்துவதற்கான வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்று சிறைக்காவலர்களுக்கான பயிற்சி தொடக்க விழாவில் டி.ஜி.பி. அமரேஷ் பூஜாரி பேசினார்.

திருச்சி

சிறையில் குற்றவாளிகள் திருந்துவதற்கான வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்று சிறைக்காவலர்களுக்கான பயிற்சி தொடக்க விழாவில் டி.ஜி.பி. அமரேஷ் பூஜாரி பேசினார்.

பயிற்சி

புதிதாக தேர்வு செய்யப்பட்ட சிறைக்காவலர்களுக்கு 7 மாத கால அடிப்படை பயிற்சி தொடக்க விழா திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறைக்காவலர் பயிற்சி பள்ளியில் நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் பூஜாரி கலந்து கொண்டு, பயிற்சியை தொடங்கி வைத்து பயிற்சி கையேட்டை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

அரசுப்பணி கிடைப்பது எவ்வளவு கடினம் என்பது உங்களுக்கு தெரியும். எனவே இந்த பணியை பொறுப்பு, கண்ணியத்துடன் செய்ய வேண்டும். ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்டு 24 மணிநேரம் மட்டுமே ஒரு காவலரின் கட்டுப்பாட்டில் வைக்கப்படுவார். அதன்பின் நீதிமன்றம் குறிப்பிடும்நாள் வரை சிறைக்குள் நமது கட்டுப்பாட்டுக்குள் தான் இருப்பார். குற்றவாளி சிறைக்குள் வருவது தண்டனைக்காக மட்டுமல்ல. அவர் திருத்தப்பட வேண்டும் என்பதற்காக தான்.

திருந்துவதற்கான வாய்ப்பு

சிறையில் தண்டனை அனுபவிக்க கூடியவர்கள் அனைவரும் குற்றவாளிகள் இல்லை. அவர்களுடைய சூழ்நிலை குற்றவாளிகளாக மாற்றியுள்ளது. எனவே குற்றவாளிகளுடன் அதிகநேரம் செலவிடும் உங்களை போன்ற காவலர்கள் தான், அவர்கள் திருந்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க முடியும்.

சிறைக்காவலர்களாகிய நீங்கள் பெற்று கொண்ட பயிற்சியை தாண்டி நேரடியாக நீங்கள் சந்திக்க போகும் சவால்கள் தான் அடுத்தக்கட்ட நகர்வுக்கு உங்களை கொண்டு செல்லும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் திருச்சி சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி, சிறை சூப்பிரண்டு ஆண்டாள், மகளிர் சிறை சூப்பிரண்டு ருக்மணி பிரியதர்ஷினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

138 பேருக்கு...

இதனை தொடர்ந்து பயிற்சி காவலர்கள் தங்கும் விடுதி, சமையலறை, உணவு வழங்குமிடம் உள்ளிட்ட இடங்களை சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் பூஜாரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிறைக்காவலர்களுக்கான 7 மாத பயிற்சியில் சிறை நடைமுறைகள், நன்னடத்தை விதிகள், குற்றவியல், தண்டனையியல், மனஇயல், வெடிபொருட்கள், நவீன கருவிகள் மற்றும் செயல்பாடுகள், முதலுதவி, மனித உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு பாடத்திட்டத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் 130 ஆண் சிறைக்காவலர்கள், 8 பெண் சிறைக்காவலர்கள் என 138 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.


Next Story