நெருப்பில்லா சமையல் போட்டி
சோளிங்கர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நெருப்பில்லா சமையல் போட்டி நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சோளிங்கர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அடுப்பில்லா, நெருப்பில்லா சமையல் போட்டி ஒன்றிய அளவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்றது.
இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். இறுதி போட்டியில் 20 மாணவிகள் கலந்து கொண்டு பழங்கள், பழரசங்கள், நவதானிய மாவு உருண்டைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவு தயாரித்தனர்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன் தலைமை தாங்கினார். வட்டார அலுவலர் அன்பரசி முன்னிலை வகித்தார். நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, தி.மு.க. செயற்குழு உறுப்பினர் அசோகன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் பூர்ணிமா ஆகியோர் கலந்து கொண்டு சுவை, தரம், வகைகள், ஊட்டச்சத்து குறித்து ஆய்வு செய்து மூன்று மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கினார்கள். தலைமை ஆசிரியர் (பொறுப்பு) மணிவண்ணன், ஆசிரியர் ரவிச்சந்திரன், அங்கன்வாடி ஊழியர்கள் உடனிருந்தனர்.