சமையல் கியாஸ் கசிந்து தீ விபத்து
வேலூரில் சமையல் கியாஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் பெண் ஒருவர் காயமடைந்தார்.
வேலூர் கொசப்பேட்டை விநாயக முதலியார் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 36). இவரது மனைவி தேவி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர் வேலூர்- ஆரணி சாலையில் தள்ளுவண்டியில் டிபன் கடை வைத்து உள்ளார். இந்தநிலையில் வீட்டுக்கு சிலிண்டர் வந்துள்ளது. தீர்ந்துபோன சிலிண்டரை அகற்றிவிட்டு புதிய சிலிண்டரை அவர்கள் மாற்றியதாக கூறப்படுகிறது.
அப்போது கியாஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. உடனேசிலிண்டரை சுரேஷ் தூக்கிக் கொண்டு வெளியே சென்றார். அப்போது வீட்டில் நிரம்யிருந்த கியாசில் தீ பிடித்து பயங்கர சத்தத்துடன் வீட்டின் இரு பக்க சுவரும் இடிந்து விழுந்தது. அருகில் உள்ள மளிகை கடையில் இருந்த பொருட்கள் சிதறியது. இந்த விபத்தில் சுரேஷ் மனைவி தேவிக்கு காயம் ஏற்பட்டது. அவரை 108 ஆம்புலன்சில் தேவியை சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து தெற்கு போலீசாரும் விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:-
சமையல் கியாஸ் சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்து வீடு முழுவதும் நிரம்பி இருந்துள்ளது. அப்போது வீட்டில் உள்ள மின்விளக்கு சுவிட்சை தேவி போட்டிருக்கலாம். இதனால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிவித்தனர்.