கோடையிலும் குளிர்வித்த மழை
கடலூர் மாவட்டத்தில் கோடையிலும் குளிர்வித்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
கடலூர்
கோடை வெயில்
கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. வீடுகளில் மின்விசிறியை சுழல விட்டால் அனல் காற்று தான் வீசியது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் இருக்க முடியாமலும், வெளியில் நடமாட முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் கடலூரில் 101 டிகிரியை தாண்டி வெயில் பதிவானது. இதன் காரணமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிரமப்பட்டனர்.
அனல் காற்றால் வாகன ஓட்டிகள் சாலைகளில் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். கோடை வெயிலில் இருந்த தப்பிக்க பொதுமக்கள் இளநீர், நுங்கு, சர்பத், தர்பூசணி, மோர் மற்றும் குளிர்பானங்களை பருகி தாகத்தை தணித்து வந்தனர். மாலை நேரங்களில் காற்று வாங்குவதற்காக சிலர் சில்வர் பீச்சில் குவிந்து வந்தனர். பிச்சாவரம் சுற்றுலா மையம், பூங்காக்களுக்கும் சென்று பொழுதை கழித்து வருகின்றனர்.
மழை
இதற்கிடையில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை தொடர வாய்ப்பு உள்ளது. அடுத்த சில நாட்கள் தமிழகம், கேரளா உள்பட நாட்டின் பெரும்பாலான இடங்களில் கன மழை பெய்யும் என்பதால் வெப்ப அலை படிப்படியாக குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
அதன்படி கடலூரில் நேற்று காலை 6.30 மணி அளவில் திடீரென மழை பெய்தது. இந்த மழை சுமார் 15 நிமிடம் நீடித்தது. இருப்பினும் இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. சற்று நேரத்தில் அந்த நீரும் வற்றி, மழை பெய்த சுவடே தெரியாமல் ஆகி விட்டது.
பொதுமக்கள் மகிழ்ச்சி
இதேபோல் பரங்கிப்பேட்டை, புவனகிரி, புதுப்பேட்டை, வடலூர், சிதம்பரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. பண்ருட்டியில் மேக மூட்டமாக இருந்தது. ஆனால் மழை இல்லை. இருப்பினும் இந்த கோடையில் கொளுத்தும் வெயிலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இந்த மழை சற்று குளிர்ச்சியை தந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.