சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
விநாயகர் சதுர்த்தி விழாவை சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.
விநாயகர் சதுர்த்தி விழாவை சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அரசு அலுவலர்கள், விழா ஏற்பாட்டாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
சிலைகள் வைக்கும் குழுவினர் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது. சிலை வைப்பதற்காக அமைக்கப்படும் தற்காலிக கொட்டகைகள் தீ விபத்து ஏற்படாத வண்ணம் உள்ளதா? என தீயணைப்பு துறையின் சான்று பெற வேண்டும். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் களிமண் சிலைகளை பயன்படுத்த வேண்டும்.
10 அடிக்கு மிகாமல்
சிலைகள் அதன் அடிபாகம் உட்பட தரையில் இருந்து 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். சிலைகளை மாற்று மதத்தினரின் வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் அமைக்க கூடாது. நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் அரசியல் கட்சியினர் பேனர்களோ மதத்தலைவர்களின் பேனார்களோ வைக்க கூடாது.
சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்லும் போது காவல்துறை அனுமதித்துள்ள வழித்தடங்களில் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். ஊர்வலத்தின்போது மற்ற மதத்தினர்களின் வழிபாட்டினை, நம்பிக்கையை இழிவுபடுத்தும் வகையில் கோஷங்கள் எதுவும் செய்தல் கூடாது. மாலை 5 மணிக்குள்ளாக சிலைகள் கரைக்கப்பட வேண்டும்.
ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
அலுவலர்கள் அனுமதிக்காக பெறப்படும் மனுக்களின் மீது விழா ஏற்பாட்டாளர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் பொருட்டு ஒற்றை சாளரமுறை பின்பற்றப்படும். ஏற்கனவே சிலை வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும்.
இந்த விநாயகர் சதுர்த்தி விழாவினை பாதுகாப்பாகவும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையிலும் நடத்த விழா குழுவினரும், பொதுமக்களும் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வேண்டுகோள்
கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ள பாதுகாப்பு வழிமுறைகளை நிச்சயம் கடைப்பிடிப்பதாகவும், எவ்வித சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாதவாறு பாதுகாப்புடன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், சிலை கரைப்பு பணிகளையும் மேற்கொள்வதாக விழாக்குழுவினர் உறுதி அளித்தனர்.
சிலைகளை கரைக்கும் இடங்களில் மின்விளக்கு வசதி மற்றும் தடுப்பு வேலிகள் அமைத்து தர வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் வைத்தனர்.