மரவள்ளி பயிர்களை தோட்டக்கலைத் துறையின் மூலம் கூட்டாய்வு

வாணாபுரம் பகுதியில் மரவள்ளி பயிர்களை தோட்டக்கலைத் துறையின் மூலம் கூட்டாய்வு செய்யப்பட்டது.
வாணாபுரம் பகுதியில் உள்ள கிராமங்களில் மரவள்ளி பயிர் சாகுபடி செய்து வரும் விவசாயிகளின் நிலங்களில் மாவுப்பூச்சி மற்றும் சிவப்பு சிலந்தி பூச்சி தாக்கப்பட்டு பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சமீபத்தில் தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து மரவள்ளி பயிர் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் உரிய பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர்கள் அன்பரசு, கங்கா மற்றும் வாழவச்சனூர் வேளாண்மை கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் நேரில் சென்று பார்வையிட்டு கூட்டாய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.
தொடர்ந்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், மரவள்ளி சாகுபடி செய்து வரும் வயல்களில் மாவுப்பூச்சியின் தாக்குதல், அறிகுறிகள் என்னவென்றால் மரவள்ளியின் இளம்தளிர், தண்டு, மற்ற இலையின் அடிப்பரப்பில் இருந்து சாற்றை உறிஞ்சி சேதப்படுத்தும். மாவுப்பூச்சியின் தாக்குதல் அடைந்த செடியில் சிவப்பு சிலந்தி பூச்சி தாக்கும்போது மேலும் வளர்ச்சி குறைந்து காணப்படும்.
அசாடிராக்டின் மருந்தை 20 மில்லியை 10 லிட்டர் தண்ணீருக்கு கலந்து செடிகள் நன்கு நனையும்படி 15 நாள் இடைவேளைக்கு ஒருமுறை தெளித்து வர வேண்டும்.
அல்லது கெமிக்கல் மருந்தாக தையோமீதாக்சேம் 5 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு அல்லது ஸ்பைரோடெட்ராமேட் என்ற மருந்தை 12.5 மில்லியை 10 லிட்டர் தண்ணீருக்கு கலந்து செடிகள் நன்கு நனையும்படி தெளிக்கலாம்.
சிவப்பு சிலந்தி பூச்சி தாக்குதல் அதிகரித்து காணப்படும்போது ஸ்பைரோமெசிபென் என்ற மருந்தை 5 மில்லியை 10 லிட்டர் தண்ணீருக்கு கலந்து செடிகள் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும் என்றனர்.
ஆய்வின்போது வாழவச்சனூர் வேளாண்மை கல்லூரி ஆராய்ச்சியாளர்கள், தண்டராம்பட்டு, திருவண்ணாமலை வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.






