கூட்டுறவு தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும்


கூட்டுறவு தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும்
x

கூட்டுறவு சங்க தேர்தலை ஜனநாயக முறையில் நடத்த வேண்டும் என கூட்டுறவு நிர்வாகிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

விருதுநகர்


கூட்டுறவு சங்க தேர்தலை ஜனநாயக முறையில் நடத்த வேண்டும் என கூட்டுறவு நிர்வாகிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சங்க கூட்டம்

விருதுநகர் மாவட்டத்திலுள்ள பல்வேறு கூட்டுறவு சங்க இயக்குனர்கள் மற்றும் நிர்வாகிகள் சங்க கூட்டம் விவசாயம் சங்க மாநில நிர்வாகி விஜய முருகன் தலைமையில் விருதுநகரில் நடைபெற்றது. மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்ட திருத்தங்கள், கூட்டுறவு சங்கங்களை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளதாக குறிப்பிட்டார். இக்கூட்டத்தில் உடனடியாக கூட்டுறவு சங்கங்களில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது என முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொது வினியோக திட்டத்தை பாதுகாக்க மாநில அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கால அவகாசம்

தமிழகத்தில் 23,149 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. கடந்த 2013 மற்றும் 2018-ம் ஆண்டில் நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகள் தவிர்க்கப்பட வேண்டும். எனவே எதிர்வரும் கூட்டுறவு சங்க தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். கூட்டுறவு சங்கங்களை உறுப்பினர் சேர்க்கைக்கு உரிய கால அவகாசம் வழங்க வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் என்பதற்கான கால அவகாசம் அளிப்பது, வாக்காளர்களுக்கு போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை வழங்குவது, வாக்காளர் தகுதிகள், வேட்பாளர் தகுதிகள் அனைவரும் அறியும் வகையில் அறிவிப்புசெய்வது, வாக்களிக்க போதுமான பாதுகாப்பு அளிப்பது, தேர்தல் ஆணையம் சுயேட்சையாகவும், சுதந்திரமாகவும் செயல்படுவதை உறுதி செய்வது உள்ளிட்ட நடைமுறைகளை அரசு உறுதி செய்ய வேண்டும்.

வேட்புமனு பரிசீலனை

வாக்குப்பதிவு வாக்கு எண்ணிக்கை முடிவுகள், அறிவிப்பு, அனைத்திலும் விதிமுறைகளை முறையாக பின்பற்றி நடத்த வேண்டும்.

மத்திய அரசின் நடவடிக்கைகளை புறந்தள்ளி கூட்டுறவு அமைப்புகளை பாதுகாப்பது என்பதை உணர்ந்து தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story