முதலாம் ராஜராஜ சோழன் வெளியிட்ட செப்புக்காசு


முதலாம் ராஜராஜ சோழன் வெளியிட்ட செப்புக்காசு
x

இலங்கை வெற்றியின் அடையாளமாக முதலாம் ராஜராஜ சோழனால் செப்புக்காசு வெளியிடப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது.

விருதுநகர்


இலங்கை வெற்றியின் அடையாளமாக முதலாம் ராஜராஜ சோழனால் செப்புக்காசு வெளியிடப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது.

செப்புக்காசு

இதுபற்றி தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு கூறியதாவது:-

மம்சாபுரம் சிவந்திப்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி வரலாற்று ஆசிரியர் செல்வத்திடம் இளந்திரை கொண்டான் ஊரைச் சேர்ந்த ஒரு மாணவர் 12 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பழமையான செப்புக்காசினை கொடுத்துள்ளார்.

இந்த காசு பற்றி எதுவும் தெரியாத நிலையில் ஆசிரியர் செல்வம் அதை பாதுகாத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 6-ந் தேதி ஆசிரியர்களுக்கான தொல்லியல் பயிற்சி முதல் சுற்று மதுரையில் நடந்த போது நாணயங்களில் வரலாற்று சிறப்புகள் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.

சிறப்பு நாணயம்

இதனை தொடர்ந்து தன்னிடம் இருந்த செப்புக்காசு முதலாம் ராஜராஜ சோழனால் வெளியிடப்பட்டது என்பதை ஆசிரியர் செல்வம் அறிந்து கொண்டார். ராஜராஜ சோழன் வரலாற்றை அறிய நாணயங்கள் உதவுகின்றன.

மன்னர்கள் தங்களின் போர் வெற்றியை கொண்டாட சிறப்பு நாணயங்கள் வெளியிட்டுள்ளார்கள். அவ்வாறு போர் மூலம் இலங்கையை முதலாம் ராஜராஜ சோழன் வெற்றி கொண்டதன் அடிப்படையில் தன் பெயர் பொறித்த ஈழக்காசுகளை வெளியிட்டுள்ளான். இக்காசு முதலாம் ராஜராஜசோழன் முதல் முதலாம் குலோத்துங்கசோழன் காலம் வரை பயன்பாட்டில் இருந்துள்ளன.

தொல்லியல் தேடல்

பொன், வெள்ளி, செம்பு ஆகிய உலோகத்தில் காசுகள் வெளியிடப்பட்டுள்ளன. செம்பாலான காசு ஈழக்கருங்காசு எனப்படுகிறது. கையில் மலரை ஏந்தியவாறு ஒருவர் நிற்க அவரது இடப்பக்கம் நான்கு வட்டங்களும் சங்கும் உள்ளன. அவற்றின் மேலே பிறையும், கீழே மலரும் உள்ளன. வலது பக்கம் திரிசூலம் விளக்கு உள்ளது. மறுபக்கம் கையில் சங்கு ஏந்தி ஒருவர் அமர்ந்திருக்கிறார்.

அவரின் இடது கை அருகே தேவநாகரி எழுத்துக்களில் ஸ்ரீ ராஜராஜ என்று மூன்று வரிகளில் எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து ஆசிரியர் செல்வம் கூறுகையில், 12 ஆண்டுகளாக என்னிடம் இருந்தும் இந்த காசின் முழு பெருமையும் என்னால் அறிய முடியவில்லை. மதுரையில் நடந்த தொல்லியல் பயிற்சியால் இதன் சிறப்பை தெரிந்து கொண்டேன். தமிழ்நாடு அரசு வழங்கிய இப்பயிற்சி எனக்குள் தொல்லியல் தேடலை விதைத்துள்ளது. மாணவர்களுக்கும் இதனை கற்றுத்தருவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story