அதிகரிக்க தொடங்கும் கொரோனா தொற்று கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் 100 படுக்கைகள் தயார்


அதிகரிக்க தொடங்கும் கொரோனா தொற்று  கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் 100 படுக்கைகள் தயார்
x

அதிகரிக்க தொடங்கும் கொரோனா தொற்று காரணமாக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் 100 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

கடலூர்


கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 74 ஆயிரத்து 302 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதேபோல் தமிழகத்திலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு ஆஸ்பத்திரிகளில் படுக்கை வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்கும்படி, அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியது.

அதன்படி கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் பழைய மகப்பேறு பிரிவு கட்டிடம், கொரோனா நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுவதற்காக ஒதுக்கப்பட்டது. இதையடுத்து அங்கு கொரோனா நோயாளிகள் சமூக இடைவெளியை கடைபிடித்து சிகிச்சை பெற வசதியாக 1 மீட்டர் இடைவெளியில் கட்டில்கள் போடப்பட்டது. தற்போது 100 படுக்கை வசதிகளுடன் கொரோனா வார்டு தயார் நிலையில் உள்ளது.

இதற்கிடையே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 3 பெண்கள், கொரோனா வார்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் விருத்தாசலம், சிதம்பரம் ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளிலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற வசதியாக படுக்கைகள் தயார் நிலையில் வைத்திருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.


Next Story