அரசு மருத்துவமனையில் தினசரி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு


அரசு மருத்துவமனையில் தினசரி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
x

காரைக்குடி பகுதியில் கொரோனா பாதிப்பு காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி பகுதியில் கொரோனா பாதிப்பு காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கொரோனா பாதிப்பு

நாடு முழுவதும் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டும், பலர் சிகிச்சை பலனின்றியும் இறந்தனர். அதைத்தொடர்ந்து 2-வது மற்றும் 3-வது அலை உருவாகியது. இதில் 2-வது அலையின்போது தமிழகத்தில் ஏராளமானோர் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெற்றும், பலர் சிகிச்சை பலனின்றியும் இறந்தனர்.

மேலும் தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க சுகாதாரத்துறை சார்பில் தடுப்பூசி செலுத்துவது, பரிசோதனை செய்வது என பல்வேறு கட்ட நடவடிக்கை களையும் எடுத்து வந்தது. இதன் காரணமாக கொரோனா தொற்று குறைய தொடங்கியது. இந்தநிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில் காரைக்குடி மற்றும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிறப்பு படுக்கை வசதிகள் போடப்பட்டு தயாராக உள்ளது. இதில் காரைக்குடி அருகே அமராவதி புதூர் பகுதியில் உள்ள கொரோனா வார்டில் 200 வார்டுகளும், சிவகங்கை அரசு மருத்துவமனையில் 200 படுக்கை வசதி கொண்ட வார்டுகளும் தயாராக உள்ளன.

முககவசம்

இந்தநிலையில் தினந்தோறும் சிவகங்கையில் சளி பரிசோதனை செய்து பார்க்கும்போது நாள்தோறும் 5-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வருகிறது. இதில் காரைக்குடி மற்றும் தேவகோட்டை பகுதியில் அதிக அளவில் கொரோனா தொற்று பரவுகிறது என மருத்துவ பரிசோதனையில் தெரிய வருகிறது. பொது இடங்களில் செல்பவர்கள் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால் தற்போது வரை பொது இடங்களில் செல்பவர்கள் முககவசம் அணியாமல் சென்று வருகின்றனர்.

இதுதவிர சில பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் கூட முககவசம் அணியாமல் சென்று வருகின்றனர். மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாக்க முககவசம் அணிவது தான் சிறந்த பாதுகாப்பு என அரசு அறிவித்தாலும்கூட இதுவரை யாரும் அதற்கு முன்வரவில்லை.

நடவடிக்கை

தற்போது சிவகங்கை மாவட்டத்தில் சுகாதாரத்துறையினர் மற்றும் காவல்துறை சார்பில் பொதுஇடங்களில் முககவசம் அணியாமல் செல்பவர்களின் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.


Next Story