கோவை வந்த பயணிக்கு கொரோனா


கோவை வந்த பயணிக்கு கொரோனா
x
தினத்தந்தி 6 April 2023 6:45 PM GMT (Updated: 6 April 2023 6:46 PM GMT)

சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

கோயம்புத்தூர்

கோவை

சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

கொரோனா பரவல்

நாடு முழுவதும் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய, மாநில சுகாதாரத்துறை சார்பில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி வெளிநாட்டு பயணிகளை தீவிரமாக கண்காணிக்க மத்திய அரசு அறிவுறுத்தியது.

பன்னாட்டு விமான நிலையங்களில் மருத்துவ கண்காணிப்பு குழுக்கள் அமைத்து பரிசோதனைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் மாவட்ட சுகாதார துறை சார்பில் கண்காணிப்பு குழுக்கள் அமைத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை வந்த பயணிக்கு கொரோனா

இதன்படி கோவை விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் சளி, காய்ச்சல் போன்ற அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதுதவிர 2 சதவீதம் பயணிகளிடம் ரேண்டம் முறையில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து பயணிகளுக்கும் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கோவை கணபதியை சேர்ந்த 41 வயது ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை வீட்டில் தனிமைப்படுத்தி சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

சளி மாதிரி சேகரிப்பு

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த பயணி ஒருவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. அவருக்கு புதிய வகை கொரோனா தொற்று உள்ளதா என்பதை கண்டறிய சளி மாதிரி சேகரிக்கப்பட்டு வைரசின் மரபணு சோதனைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

ஒரே இடத்தில் அதிகம்பேருக்கு கொரோனா பாதிப்பு தென்பட்டால் (கிளஸ்டர்கள்) மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அவா்களின் சளி மாதிரிகள் மட்டுமே மரபணு சோதனைக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் இதுவரை புதிய கிளஸ்டர்கள் ஏதும் உருவாகவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு கொேரானா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story