திருச்சி மாவட்டத்தில் வேகமாக பரவும் கொரோனா
திருச்சி மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு 100-ஐ தாண்டியது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 632 ஆக உயர்ந்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு 100-ஐ தாண்டியது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 632 ஆக உயர்ந்துள்ளது.
113 பேருக்கு கொரோனா
திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 வாரமாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக பொதுமக்கள் அலட்சியத்தினால் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை 496 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று முன்தினம் 1,126 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 112 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில் நேற்று புதிதாக 113 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 779 ஆக உயர்ந்துள்ளது. இதில் 47 பேர் பூரண குணமடைந்துள்ளனர். தற்போது 44 பேர் மருத்துவமனைகளிலும், 588 பேர் தங்கள் வீடுகளிலும் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதே நேரம் இதுவரை மொத்தம் 1,161 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். நேற்று கொரோனாவுக்கு பலி எதுவும் இல்லை.
மொத்த பாதிப்பு
திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடங்கியது முதல் இன்று வரை மொத்தம் 95,909 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மொத்தம் 94,116 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது மொத்தம் 632 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்காக 2,803 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.