திருச்சி அரசு மருத்துவமனையில் 40 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிறப்பு வார்டு தயார்
திருச்சி அரசு மருத்துவமனையில் 40 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிறப்பு வார்டு தயார் நிலையில் உள்ளது.
திருச்சி அரசு மருத்துவமனையில் 40 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிறப்பு வார்டு தயார் நிலையில் உள்ளது.
கொரோனா தொற்று
நாடு முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநிலங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனாவை தடுப்பதற்கான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு தனியாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மருத்துவமனை டீன் டாக்டர் நேரு தலைமையில் கொரோனா தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கொரோனா சிறப்பு வார்டை டீன் நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதா?, மருந்து மாத்திரைகள் இருப்பு உள்ளதா?, மற்றும் சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜன், வென்டிலேட்டர் தயார் நிலையில் உள்ளதா? என்று ஆய்வு செய்தார்.
கொரோனா பரிசோதனை
பின்னர் டீன் டாக்டர் நேரு நிருபர்களிடம் கூறும்போது, கொரோனா சிறப்பு வார்டில் தற்போது 40 படுகை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. 330 ஆக்சிஜன் கான்சென்டரேட்டர்கள், 25 ஆயிரம் பி.பி.இ. கிட், 120 வெண்டிலேட்டர்கள் மற்றும் தேவையான அளவு மருந்துகள் கையிருப்பில் உள்ளன. கொரோனாவை எதிர் கொள்ளும் வகையில் டாக்டர்கள், நர்சுகள் தயார் நிலையில் உள்ளனர். தற்போது, குறைந்த அளவு கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். திருச்சி மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தினமும் 300-க்கும் மேற்பட்டோர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். தற்போது இந்த சிகிச்சை மையத்திற்கு உள்ளேயே ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை செய்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை கொரோனா தொற்றை எதிர்கொள்ள திருச்சி அரசு மருத்துவமனை தயார் நிலையில் உள்ளது. போதுமான மருந்துகள் கையிருப்பு உள்ளது என்றார்.
----