மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை
பொள்ளாச்சி பகுதிகளில் மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி பகுதிகளில் மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா பரிசோதனை
கொரோனா பாதிப்பு குறைந்ததால் நடப்பு கல்வி ஆண்டில் கடந்த மாதம் 13-ந்தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது மழை பெய்து வருவதால் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி பொள்ளாச்சி நகராட்சி, வடக்கு ஒன்றியங்களில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளிடம் சளி மாதிரி சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பாதுகாப்பு வழிமுறைகள்
பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக பள்ளிகளில் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளை அடிக்கடி சுத்தப்படுத்துதல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் காய்ச்சல், இருமல், சளி போன்ற தொந்தரவுகளுடன் வரும் மாணவ-மாணவிகள் குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொள்ளாச்சி நகராட்சி, வடக்கு ஒன்றியங்களில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளிகளில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனை முடிவில் தொற்று உறுதி செய்யப்படும் மாணவ-மாணவிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிகக ஏற்பாடு செய்யப்படும். தற்போது மழை பெய்து வருவதால் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. எனவே குடிநீரை காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும். மேலும் சாதாரண காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.