1,459 மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்

மதுரை மாவட்டத்தில் 1,459 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது என்று கலெக்டர் அனீஷ் சேகர் கூறியுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் 1,459 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது என்று கலெக்டர் அனீஷ் சேகர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வாக்குச்சாவடி மையங்கள்
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்காக மெகா தடுப்பூசி முகாம் 7-ந் தேதி (இன்று) நடத்தப்படுகிறது. இந்த முகாமில் முதல் தவணை மற்றும் 2-வது தவணை கொரோனா தடுப்பூசி இதுவரை போடாதவர்களுக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவு பெற்ற 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது தவணை முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தப்படும். மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 909 மையங்களிலும், நகர் பகுதிகளில் 550 மையங்களிலும் என மொத்தம் 1,459 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இந்த முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை அனைத்து வாக்குசாவடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் நடக்கிறது.
முககவசம்
மதுரை மாவட்டத்தில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த தகுதி உடையவர்கள் 3 லட்சத்து 10 ஆயிரத்து 490 பேர். அதில் ஊரக பகுதிகளில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 981 பேர். மாநகர் பகுதிகளில் 1 லட்சத்து 90 ஆயிரத்து 509 பேர். எனவே, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த தகுதியுடையவர்கள் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். அதே போல் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் முடிவு பெற்றவர்கள் 11 லட்சத்து 57 ஆயிரத்து 97 பேர். அதில் ஊரக பகுதிகளில் 5 லட்சத்து 76 ஆயிரத்து 518 பேரும், மாநகர பகுதிகளில் 5 லட்சத்து 80 ஆயிரத்து 579 ஆகும்.
மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். மேலும் கூட்டமான இடங்களில் சமூக இடைவெளி கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல் மற்றும் பொது இடங்களுக்கு சென்று வீடு திரும்பிய பின் முறையாக கைகழுவுதல் போன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






