தமிழகத்தில் ஒரே நாளில் 17½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் ஒரு லட்சம் இடங்களில் நேற்று நடந்த சிறப்பு முகாம் மூலம் 17½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
சென்னை,
தமிழகத்தில் நேற்று ஒரு லட்சம் இடங்களில் 31-வது மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.
இதில் சென்னையில் மட்டும் 200 வார்டுகளுக்கு 1,600 சுகாதார குழுக்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது.
17½ லட்சம் பேருக்கு...
அந்த வகையில் நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 17 லட்சத்து 55 ஆயிரத்து 364 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
இதில் முதல் தவணை தடுப்பூசி 3 லட்சத்து 53 ஆயிரம் பேருக்கும், 2-வது தவணை தடுப்பூசி 10 லட்சத்து 88 ஆயிரத்து 865 பேருக்கும் போடப்பட்டுள்ளது. மேலும் பூஸ்டர் தடுப்பூசி 3 லட்சத்து 13 ஆயிரத்து 499 பேருக்கும் செலுத்தப்பட்டது.
தமிழகத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டோரில் முதல் தவணையாக 95.23 சதவீதமும், 2-வது தவணையாக 87.25 சதவீதம் பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
பூஸ்டர் தடுப்பூசி
இதேபோல் 12 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களில் முதல் தவணையாக 18 லட்சத்து 94 ஆயிரத்து 484 பேருக்கும், 2-வது தவணையாக 13 லட்சத்து 7 ஆயிரத்து 217 பேருக்கும், 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களில் முதல் தவணையாக 30 லட்சத்து 23 ஆயிரத்து 682 பேருக்கும், 2-வது தவணையாக 25 லட்சத்து 5 ஆயிரத்து 819 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என 18 லட்சத்து 5 ஆயிரத்து 929 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதுவரை நடந்த சிறப்பு முகாம்கள் மூலம் 4 கோடியே 61 லட்சத்து 55 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
6 மாவட்டங்களில் அமைச்சர் ஆய்வு
தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் நடந்த சிறப்பு முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது திருச்சி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி மற்றும் இதர மாவட்டங்களில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த எம்.பி., எம்.எல். ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
10-ந் தேதி (நேற்று) சிறப்பு முகாம் நடைபெற்றதால் 11-ந் தேதி (இன்று) மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறாது.
மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.