திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தயார் நிலையில் கொரோனா வார்டு
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு தயார் நிலையில் உள்ளது.
சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. இந்தியாவிலும் ஆங்காங்கே கொரோனா மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் கொரோனா சிகிச்சைக்கு மருத்துவமனைகளை தயார் நிலையில் வைக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா நோயாளிகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று மாநில பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையொட்டி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மருத்துவமனை வளாகத்தில் உள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை பிரிவு கட்டிடம் கொரோனா வார்டாக தற்போது மாற்றப்பட்டுள்ளது.
அங்கு 25 படுக்கை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளது. மேலும் படுக்கைகளின் எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்கும் அளவில் 600 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வாயு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர 100 செயற்கை சுவாச கருவிகள், 6 ஆயிரம் லிட்டர் திரவ வடிவிலான ஆக்சிஜனும், 300 சிலிண்டர்களில் ஆக்சிஜனும் கையிருப்பில் உள்ளது. மேலும் காற்றில் இருந்து ஆக்சிஜனை பிரித்தெடுக்கும் 2 கருவிகள் தயார் நிலையில் உள்ளன.
இந்த தகவலை திண்டுக்கல் அரசு மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.