ஆக்கிரமிப்பு கடைகள், தள்ளுவண்டிகளை உடைத்து அகற்றிய மாநகராட்சி ஊழியர்கள்


ஆக்கிரமிப்பு கடைகள், தள்ளுவண்டிகளை உடைத்து அகற்றிய மாநகராட்சி ஊழியர்கள்
x

ஆக்கிரமிப்பு கடைகள், தள்ளுவண்டிகளை உடைத்து மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

திருச்சி

ஆக்கிரமிப்பு கடைகள்

திருச்சி மாவட்ட சாலை பாதுகாப்புக்குழு கூட்டம் கலெக்டர் தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது, மாநகரில் பல பகுதிகளில் வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்தும், தள்ளுவண்டிகளை நிரந்தரமாக சாலையோரம் நிறுத்தி வைத்து செல்வதாலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக புகார்கள் கூறப்பட்டன.

இதைத்தொடர்ந்து சாலையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள அனைத்து கடைகளையும் அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகத்துக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார். அதன்பேரில் மாநகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் உள்ள கடைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆணையாளர் வைத்திநாதன் உத்தரவிட்டார்.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இதைத்தொடர்ந்து முதற்கட்டமாக மாநகராட்சி உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில், இளநிலை பொறியாளர் பாவாபக்ருதீன் மேற்பார்வையில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று காலை நடைபெற்றது. திருச்சி தலைமை தபால் நிலையம் முதல் எம்.ஜி.ஆர். சிலை வரை பாரதிதாசன் சாலையிலும், ஒத்தக்கடை முதல் மத்திய பஸ் நிலையம் வரை வில்லியம்ஸ் சாலையிலும், ராக்கின்ஸ் ரோடு, பஸ் நிலையத்தின் வெளிப்பகுதியிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

அப்போது, இரவு கடை நடத்திவிட்டு அங்கேயே தள்ளுவண்டிகளை சிலர் பூட்டி வைத்துவிட்டு சென்று இருந்தனர். அந்த தள்ளுவண்டிகளை பொக்லைன் எந்திரம் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் உடைத்து, அவற்றை லாரிகளில் ஏற்றினர். மேலும் அனுமதி பெற்று பெட்டிக்கடை நடத்துபவர்கள் கூடுதலாக சாலையில் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்த பொருட்களையும் உடைத்து லாரியில் ஏற்றினர்.

முற்றுகையிட்ட வியாபாரிகள்

அப்போது மாநகர பொறியாளர் சிவபாதம், செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் ஆய்வு செய்ய வந்தனர். தங்கள் தள்ளுவண்டிகள் உடைக்கப்பட்டதை அறிந்து அங்கு வந்த வியாபாரிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு, எங்கள் கடைகளை எப்படி உடைக்கலாம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, தள்ளுவண்டிகளை நிறுத்தி வியாபாரம் செய்துவிட்டு அங்கிருந்து வண்டியை எடுத்து சென்றுவிட வேண்டும். அங்கேயே நிரந்தரமாக நிறுத்தக்கூடாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். போலீசார் வியாபாரிகளை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் பஸ் நிலைய பகுதியில் நடைபாதையில் பொதுமக்களுக்கு இடையூறாக ஓட்டல் கடைக்காரர்கள் வைத்திருந்த கிரைண்டர்கள், ஜெனரேட்டர்கள், அடுப்புகள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.

சாலை மறியல்

காலை தொடங்கிய இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மதியம் 3 மணி வரை நடைபெற்றது. இதில் 25-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. பழைய திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகே அங்கிருந்த கடைக்காரர்களே ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டனர். மேலும் தள்ளுவண்டியை நிரந்தரமாக நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினால் அவை அகற்றப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட தள்ளுவண்டிக்கடை வியாபாரிகள் நேற்று மதியம் வில்லியம்ஸ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கண்டோன்மெண்ட் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story