காலிகுடங்களுடன் மாநகராட்சி மண்டல அலுவலகம் முற்றுகை


காலிகுடங்களுடன் மாநகராட்சி மண்டல அலுவலகம் முற்றுகை
x

திருப்பரங்குன்றத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மதுரை

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தரைமட்ட நீர்தேக்க தொட்டி

மதுரை மாநகராட்சி எல்லை விரிவாக்கப்பட்ட பகுதியான திருப்பரங்குன்றம் மேட்டுத்தெருவில் 18 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட ராட்சத நீர்தேக்க தொட்டி அமைந்து உள்ளது. இந்த தொட்டிக்கு பசுமலை மூலக்கரையில் உள்ள நீரேற்று நிலையத்தில் இருந்து மின்மோட்டார் மூலம் ராட்சத குழாய் வழியாக தரைமட்ட நீர் தேக்க தொட்டிக்கு தண்ணீர் கொண்டுவந்து நிரப்பப்பட்டு குழாய்கள் வழியாக பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டது. இதற்காக விராட்டிபத்து வைகை படுகையிலும் மாடக்குளம் கண்மாய் மற்றும் திருப்பரங்குன்றம், தென்கால் கண்மாய் பகுதியிலும், சிற்றனை வைகை படுகையிலுமாக ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

4 முறை மோட்டார்கள் பழுது

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பசுமலை மூலக்கரை நீரேற்று நிலையத்தில் உள்ள 2 மின்மோட்டார்களும் ஒரே நேரத்தில் பழுதானது. இதனையடுத்து நீரேற்று நிலையத்தில் இருந்து தரைமட்ட நீர்தேக்க தொட்டிக்கு முழுமையாக தண்ணீர் வரத்து இல்லாமல் போனது. இந்த நிலையில் பழுதான மின்மோட்டாரை சரி செய்து இயக்கியபோதிலும் சரியாகவில்லை. கடந்த 50 நாளில் அடுத்தடுத்து 4 முறை பழுதாகிவிட்டது. அதை சரிசெய்வதிலேயே காலம் கடந்து வருகிறது

குடிநீர் பஞ்சம்

இதற்கிடையில் திருநகர் பகுதியில் இருந்து 9 லட்சம் லிட்டர் காவிரி குடிநீரை 4 நாளைக்கு ஒருமுறை திருப்பரங்குன்றத்திற்கும், அடுத்த 4 நாட்களுக்கு பிறகு திருநகருக்குமாக சுழற்சி முறையில் வினியோகிக்கப்படுகிறது.இது 2 பகுதி மக்களுக்குமே பற்றாக்குறை ஏற்பட்டு தண்ணீர் பஞ்சம் தலை விரித்து உள்ளது. இதனால் தனியார் லாரிகள் மூலம் விற்கப்படும் குடிதண்ணீரை ஒரு பெரிய குடம் ரூ.13-க்கும், ஒருசிறிய குடம் ரூ.10-க்குமாக விலைக்கு வாங்க கூடிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த 9-ந்தேதி அன்று திருநகர் ஓனர்க்கல் பகுதி மக்கள் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடு்பட்டனர். இந்த நிலையிலும் குடிநீர் கட்டுப்பாட்டை போக்கிட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்ததாக தெரிவில்லை.

மண்டல அலுவலகம் முற்றுகை

இந்த நிலையில் நேற்று திருப்பரங்குன்றம் கீழத்தெரு, கூடல்மலை, பெரியரதவீதியை சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதை அறிந்த மண்டல தலைவர் சுவிதாவிமல் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் கொடுப்பதாக உறுதி அளித்தனர்.இதையடுத்து அவர்கள் முற்றுகையை கைவிட்டனர்.


Related Tags :
Next Story